இந்தோனேசியாவில் கடந்த வாரம் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ளூர் அணிகளுக்கிடையே நடைபெற்ற கால்பந்து போட்டியின் முடிவில் மைதானத்தில் ரசிகர்களால் ஏற்பட்ட கலவரத்தில், 131 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சோகம் மறைவதற்குள் அர்ஜென்டினாவில் கால்பந்து போட்டியின்போது ஏற்பட்ட மோதலில் ரசிகர் ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த நாட்டின் தலைநகர் பியூனஸ் அயர்சில் உள்ள ஒரு மைதானத்தில் உள்ளூர் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது. இதைகாண ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டதால் மைதானம் நிரம்பி வழிந்தது.
அதை தொடர்ந்து மைதானம் பூட்டப்பட்ட நிலையில் மேலும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மைதானத்துக்குள் செல்ல முண்டியடித்தனர். அப்போது அவர்களை போலீசார் கலைக்க முயன்றபோது இருதரப்புக்கும் இடையில் மோதல் வெடித்தது.
போலீசார் ரப்பர் குண்டுகளால் சுட்டதோடு, கண்ணீர் புகை குண்டுகளையும் வீசி எறிந்தனர். இந்த மோதலில் ரசிகர் ஒருவர் பலியானார். பலர் படுகாயம் அடைந்தனர்.