News

ஆணைக்குழுக்கள் ஐ.நாவுக்கு கணக்கு காட்ட இனவழிப்பு அரசின் மற்றுமொரு திட்டம்!: ஈழத்தமிழர் உறவினர் அமைப்பு கண்டனம் 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்களை சந்திக்கும் திட்டம் ஒன்றுடன் இனவழிப்பு அரசின் ஆணைக்குழுக்கள் மட்டக்களப்பிற்கு செல்லவிருப்பதன் நோக்கம் சா்வதேச சமூகத்திற்கு மீண்டும் ஒருமுறை கணக்கு காட்டி ஏமாற்றுவதற்கான மற்றொரு முயற்சி என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழத்தமிழரின் உறவினர் அமைப்பு தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழத்தமிழரின் உறவினர் அமைப்பால் இன்றைய தினம் (11.10.2022) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த செய்தி குறிப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்களை சந்திக்கும் திட்டம் ஒன்றுடன் இனவழிப்பு அரசின் ஆணைக்குழுக்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி கிழக்கு மாகாணமான மட்டக்களப்பிற்கு செல்லவிருப்பதன் நோக்கம் சா்வதேச சமூகத்திற்கு மீண்டும் ஒருமுறை கணக்கு காட்டி ஏமாற்றுவதற்கான மற்றொரு முயற்சி.

இதனை அம்பலப்படுத்தும் வகையில் ஈழத்தமிழ் மக்கள் இதனை முழுமையாகப் புறக்கணித்து இதில் எமக்கு நம்பிக்கை இல்லை என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

ஆணைக்குழுவின் வருகையை எமது உறவுகள் தீவிரமாக எதிர்ப்பதுடன், அவர்களுடைய வருகையை முழுமையாக பகிஷ்கரிப்பதன் மூலம் இனவழிப்பு அரசின் கபட நோக்கத்தை சா்வதேச சமூகத்துக்கு அம்பலப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுகின்றோம்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் குடும்பங்கள் மீது கடுமையான பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்திவிட்டு தாங்கள் செய்த குற்றங்களை மூடி மறைக்க இரண்டு இலட்சம் ரூபாவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இதை நாம் முற்று முழுதாக நிராகரிக்கின்றோம் எமக்கு வேணும் எமது உறவுகள்,  நாம் கோருவது இரண்டு இலட்சம் ரூபா அல்ல கொலையாழிகளும், கடத்தல் காரர்களும் சர்வதேச குற்றவியல் நீதி மன்றில் தொங்கவிடப்பட வேண்டும் அதற்குத்தான் சர்வதேச விசாரணை வேண்டும் என கோருகின்றோம்.

இலங்கை குறித்த தீர்மானம் ஐ.நாவில் கோர் குழுவால் நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், மிகவும் மோசமான தமிழின படுகொலை நடைபெற்றதற்கான ஆதாரங்களைச் சேகரிப்பதற்கான சா்வதேச பொறிமுறை ஒன்று அமைக்கப்படவிருக்கும் பின்னணியில், உள்நாட்டுப்பொறிமுறை மூலமாக பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது என காட்டிக்கொள்வதற்கான இலங்கை அரசின் ஒரு திட்டமிட்ட கபட நாடகம் தான் இது.

கடந்த கால அரசின் ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது என இது தொடர்பில் வெளியிடப்பட்ட செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

2009ம் ஆண்டு இனவழிப்பின் ஊடாக யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த சிங்கள அரசாங்கம் மீது 13 வருடங்கள் கடந்துள்ள நிலைமையிலும் சர்வதேச சமூகத்தால் இதுவரை அவர்களுக்கான தண்டனைகள் சர்வதேச குற்றவியல் நீதி மன்றம் ஊடாக மேற்கொள்ளப்படவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களது கோரிக்கைகள்

ஆணைக்குழுக்கள் ஐ.நாவுக்கு கணக்கு காட்ட இனவழிப்பு அரசின் மற்றுமொரு திட்டம்!: ஈழத்தமிழர் உறவினர் அமைப்பு கண்டனம் (Photos) | Missing Persons United Nations Sri Lanka Ohchr

 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களது கோரிக்கைகள் சர்வதேச சமூகத்தால் தீா்க்கப்படவில்லை.

மாறாக பாதிக்கப்பட்ட மக்களின் சம்மதமின்றி இலங்கை அரசாலும்,சில வெளி சக்திகளாலும்,கூட்டமைப்பின் அனுசரணையுடன் கொலையாளிகளை நீதிபதிகளாக்கும் உள்நாட்டுப் பொறிமுறை கொண்டுவரப்பட்டது.

உள்நாட்டுப் பொறிமுறை ஊடாக பிரச்சினையைத் தீா்ப்பதற்கான சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதிகளை வழங்கிய போதும் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் எதனையும் கடந்த காலங்களில் அரச அதிகாரத்திலிருந்த எந்த அரசாங்கமும் முன்னெடுக்கவில்லை.

இனிமேலும் அதற்கான செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுக்கப்போவதில்லை. மாறாக இனவழிப்பு,மற்றும் போர்க் குற்றங்களில் ஈடுபட்ட படையினரைப் உள்ளகப்பொறிமுறையூடாக பாதுகாப்பது என்பதுதான் இலங்கை அரசின் முன்னுரிமைக்குரிய பணியாக உள்ளது.

இந்த நிலையில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court, பிரெஞ்சு: Cour Pénale Internationale) உலகில் இனப்படுகொலை, மனிதருக்கு எதிரான குற்றங்கள், போர் குற்றங்கள் செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க 2002இல் உருவாக்கப்பட்டது.

இந்த நீதிமன்றம் நெதர்லாந்தின் டென் ஹாக் நகரில் அமைந்துள்ளது. எனவே ஈழத்தமிழர் ஆகிய நாம் பரந்துபட்ட போராட்ட வெளிகளை உருவாக்கி சர்வதேச நீதி கோர அனைவரும் அணிதிரள வேண்டும்.”என அதில் குறிப்பிட்டுள்ளனர்.

May you like this Video

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top