News

இலங்கை தொடர்பில் ஆஸ்திரேலியத் தூதுவரிடம் மனோ முன்வைத்துள்ள கோரிக்கை

“நலிவுற்றோரை அடையாளம் காணும் அளவுகோல்கள் பற்றி இலங்கை அரசிடம் கேள்வி எழுப்ப வேண்டும்”என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும், மாலைதீவுக்குமான ஆஸ்திரேலியத் தூதுவர் போல் ஸ்டீபனைத் தூதுவரின் கொழும்பு இல்லத்தில் நேற்று முன்தினம் சந்தித்து உரையாடியபோதே மேற்கண்டவாறு தாம் வலியுறுத்தினார் என்று மனோ கணேசன் எம்.பி. நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,”சமீபத்தில் நான் ஆஸ்திரேலியாவுக்கு மேற்கொண்ட அதிகாரபூர்வ பயணம் தொடர்பில் உரையாடினோம்.

ஆஸ்திரேலியாவில் திகழும் பன்மைத்துவ கலாச்சாரம் பற்றிய பாடங்கள் இலங்கைக்கு அவசியம் என்பதை ஆஸ்திரேலியத் தூதுவர் போல் ஸ்டீபனுக்குத் தெரிவித்தேன்.

குறிப்பாக ஆஸ்திரேலிய அரசு மற்றும் அரசு நிலை அரசியல் பிரமுகர்கள் அங்கு வாழும், இலங்கையர்களுடன் குறிப்பாக புலம்பெயர்ந்துள்ள சிங்கள ஆஸ்திரேலியர்களுடனும், அவர்களது அமைப்புகளுடனும் தொடர்புகளை மேம்படுத்தி அவர்கள் மூலம் பன்மைத்துவ சிந்தனையை இலங்கைக்குள் கொண்டு வர உதவ வேண்டுமென வலியுறுத்தினேன்.

இலங்கையின் நெருக்கடி நிலைமையும், அதற்கான மாற்றமும் வெறுமனே பொருளாதார விடயங்களை சார்ந்தது அல்ல என்ற எமது நிலைபாட்டை அவருக்கு வலியுறுத்தினேன்.

பொருளாதார விடயங்களுக்கு அப்பால், மூல காரணமாக திகழ்வது இலங்கையில் பன்மைத்துவ கொள்கை ஏற்றுக்கொள்ளப்படாமையே என்ற தமிழ் மக்களின் எண்ணப்பாட்டை அவருக்கு சுட்டிக்காட்டினேன்.

ஆகவே, இலங்கையில் ஏற்படுகின்ற எந்தவொரு மாற்றமும் இலங்கை பன்மொழி, பன்மத, பல்லின நாடு என்ற பன்மைத்துவ கொள்கை அரசமைப்பு ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படுவதிலேயே தங்கியுள்ளது. அதுவே மாற்றத்துக்கான ஆரம்பப்புள்ளி என தெளிவுபடுத்தினேன்.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை,மலையகத் தமிழர்கள்,தோட்டத் தொழிலாளர்கள்,நடைபெற்ற அரகலய கிளர்ச்சி, எதிர்க்கட்சிகளின் உடனடித் தேர்தலுக்கான கோரிக்கை ஆகியவை பற்றியும் உரையாடினோம்.

இலங்கை சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நலிவுற்ற பிரிவினரான தோட்டத் தொழிலாளர்கள், தொழில் ரீதியாகவும், தமிழ் சிறுபான்மையினர் என்ற இன ரீதியாகவும் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை எடுத்துக் கூறினேன்.

பின்தங்கிய நலிவுற்ற பிரிவினருக்கு என ஆஸ்திரேலியா உட்பட உலக அரசுகள் வழங்கும் உதவித் தொகைகள், நன்கொடைகள் தோட்ட தொழிலாளர்களுக்கு பெரும்பாலும் கிடைப்பதில்லை.

நலிவுற்ற பிரிவினரை அடையாளம் காண்பதில் இலங்கை அரசு கடைப்பிடிக்கின்ற அளவுகோல்கள் பிழையானவை. அவை அரசியல் மற்றும் சில வேளைகளில் தவறான இன அடிப்படைகளை கொண்டவை.

இதன் காரணமாக நலிவுற்ற பிரிவினரானத் தோட்டத் தொழிலாளர்கள் நலிவுற்றோர் பட்டியலில் இடம்பெறுவதில் தவிர்க்கப்படுகிறார்கள்.

ஆகவே, இந்த நலிவுற்றோரை அடையாளம் காணும் அளவுகோல்கள் பற்றி ஆஸ்திரேலியா, இலங்கை அரசிடம் கேள்வி எழுப்ப வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளேன்.

உடனடியாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி, புதிய மக்களாணையை பெறுவதன் மூலமாகவே நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை, உலக ரீதியான ஏற்புடைமை, பொருளாதார மீட்சிக்கான வழிவரைபு ஆகியன ஒழுங்கமைக்கப்படும் எனவும் கூறினேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top