இலங்கையின் நலிவடைந்த நிலையில் உள்ள மக்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக பெருமளவு கடன்வாங்குதல், குறைந்தளவு உணவை உண்ணுதல், நாளாந்த உணவை குறைத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என சர்வதேச செஞ்சிலுவை செம்பிறை சமூகத்தின் ஆசிய பசுபிக்கிற்கான பிராந்திய இயக்குநர் அலெக்ஸாண்டர் மத்யூ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கம் மற்றும் இராஜதந்திர சமூகத்தினரை சந்திப்பதற்காக மேற்கொண்ட விஜயம் குறித்து கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே வறுமைக்கோட்டின் கீழ் உள்ள இலங்கையின் நலிவடைந்த மக்கள் பெருமளவு கடன்வாங்குதல், குறைந்தளவு உணவை உண்ணுதல், நாளாந்த உணவை குறைத்தல், பெறுமதியான சொத்துக்களை அடகுவைத்தல் மற்றும் ஏனைய உயிர்வாழும் உத்திகளை அவர்கள் பயன்படுத்துகின்றனர் என குறிப்பிட்டுள்ள அவர் அதிலிருந்தும் அவர்கள் சிறியளவு பயனையே பெறுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
மிகமோசமான நிலையில் உள்ள மனிதாபிமான தேவைகளை பூர்த்தி செய்வதே எங்களின் முன்னுரிமைக்குரிய விடயம் இதனை திறமையாகவும் விரைவாகவும் செய்யாவிட்டால் இப்போது நெருக்கடியான நிலையில் உள்ள மக்கள் தப்பமுடியாத அவலநிலைக்கு செல்வார்கள் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் இது செயற்படவேண்டிய தருணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சர்வதேச செஞ்சிலுவை செம்பிறை சமூகத்தின் இலங்கை குறித்த அறிக்கைகள் ஏற்கனவே வறுமைக்கோட்டின் கீழ் உள்ள இலங்கையின் நலிவடைந்த மக்கள் எவ்வாறு விரக்தி நிலையை நோக்கி தள்ளப்படுகின்றனர் என்பதை நேரடியாக தெரிவிக்கும் விதத்தில் காணப்படுவதாகவும் அலெக்ஸாண்டர் மத்யூ தெரிவித்துள்ளார்.