இலங்கையின் விஞ்ஞானி ஒருவர் உருவாக்கிய இருமல் மூலம் கோவிட் நோயாளிகளை அடையாளம் காணக் கூடிய செல்போன் செயலி தொழில்நுட்பத்தை உலகில் முன்னணி மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளை தயாரிக்கும் நிறுவனமான ஃபைசர் நிறுவனம் கொள்வனவு செய்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான உதந்த அபேரத்ன உருவாக்கியுள்ள இந்த செயலியை ஃபைசர் நிறுவனம் 179 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களுக்கு கொள்வனவு செய்துள்ளது.
இந்த செயலியை உருவாக்க பில் மற்றும் மெலிண்டா கோடிஸ் நிதியம் தனக்கு தேவையான நிதியுதவிகளை வழங்கியதாக பேராசிரியர் உதந்த அபேரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த புதிய கண்டுபிடிப்பை பயன்படுத்தி ஒருவரது இருமல் சத்தத்திற்கு அமைய அவருக்கு கோவிட் 19 தொற்றி இருக்கின்றதா என்பதை கண்டறிய முடியும்.
ரொப்பீட் என்டிஜன் மற்றும் பீ.சீ.ஆர். பரிசோதனைகளுக்கு பதிலாக இந்த புதிய செயலியை பயன்படுத்தி கோவிட் தொற்றாளர்களை மாத்திரமல்லாது பல்வேறு சுவாச நோய்கனை அடையாளம் காண முடியும் எனவும் பேராசிரியர் கூறியுள்ளார்.
குறிப்பாக விமான நிலையங்கள், விளையாட்டு இடங்கள் அல்லது முதியோர் இல்லங்களில் தொற்றாளர்களை துரிதமாக அடையாளம் காண இந்த புதிய செயலியை பயன்படுத்த முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.