ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள பாராளுமன்றத்தை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈராக் தலைநகர் பாக்தாத்தின் பசுமை மண்டல (பாதுகாப்பு நிறைந்த பகுதி) பகுதியில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாக்தாத் நகரை சுற்றிலும் 9 ராக்கெட்டுகள் மூலம் சக்தி வாய்ந்த குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில் பொதுமக்களில் பலர் காயம் அடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், இந்த தாக்குதலில் எத்தனை பேர் காயம் அடைந்தனர் என்ற துல்லியமான விவரங்களை ஈராக் ராணுவம் அளிக்கவில்லை.
பாக்தாத்தில் உள்ள பசுமை மண்டல பகுதியில் பல்வேறு நாட்டு தூதரகங்களும் அரசு அலுவலகங்களும் உள்ளன. புதிய அதிபரை தேர்வு செய்வதற்காக ஈராக் பாராளுமன்றம் கூட இருந்த சில நிமிடங்களுக்கு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
பாராளுமன்ற கூட்டத்தை சீர்குலைக்கும் நோக்கத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரானில் பாராளுமன்றத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த மாதம் பாராளுமன்ற சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை தீர்மானம் கொண்டு வர இருந்த சில நிமிடத்திற்கு முன்பாக ராக்கெட் தாக்குதல் நடைபெற்றது.