News

உக்ரைன் தலைநகரில் மின் உற்பத்தி நிலையம் மீது ரஷியா ஏவுகணை வீச்சு

உக்ரைன் நாட்டின் தலைநகரில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தின் மீது ரஷியா ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது.

உக்ரைன் மீது ரஷியா 8 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல நகரங்கள் உருக்குலைந்து போயுள்ளன. மேலும் உக்ரைனுக்கு சொந்தமான பல நகரங்களை ரஷியா ஆக்கிரமித்துள்ளது. எனினும் உக்ரைன் ராணுவம் ரஷிய படைகளிடம் சரணடைய மறுத்து துணிச்சலுடன் தொடர்ந்து சண்டையிட்டு வருகிறது.

இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிரீமியாவை ரஷியாவுடன் இணைக்கும் பாலத்தில் நடந்த குண்டு வெடிப்புக்கு உக்ரைன்தான் காரணம் என குற்றம் சாட்டிய ரஷியா உக்ரைன் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியது.

அந்த வகையில் போர் தொடங்கியதில் இருந்துஇதுவரை இல்லாத அளவுக்கு கடந்த வாரம் உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா பயங்கரமான தாக்குதலை நடத்தியது.

இந்த நிலையில் கீவ் நகரில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தின் மீது நேற்று ரஷிய படைகள் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தின. இதில் அங்கு மிகப்பெரிய அளவில் தீப்பற்றியது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. எனினும் இந்த தாக்குதலில் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என கீவ் நகர கவர்னர் ஒலெக்சி குலேபா தெரிவித்தார்.

மக்கள் வசிக்கும் பகுதிகளில் மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பை துண்டிக்க ரஷிய ராணுவம் முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். மின் உற்பத்தி நிலையில் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்யும் பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கீவ் நகரில் வசிப்பவர்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள 3 பிராந்தியங்களை சேர்ந்த மக்கள் மாலை நேரங்களில் மின்சாரத்தை குறைவாக பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top