இலங்கையின் அரசியல் மற்றும் ஏனைய விடயங்களை ஆராயும் வகையில் ஐரோப்பிய ஒன்றியக்குழு ஒன்று வருகைத் தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த குழு இந்த மாதத்தில் இலங்கைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல் சம்பவங்களின் பின்னணியில் இலங்கைக்கு வழங்கும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பில், ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கைகளை விடுத்திருந்தது.
இதேவேளை மனித உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும், அமைதியான போராட்டங்களுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் போன்ற வலியுறுத்தல்களை ஒன்றியம் விடுத்திருந்தது.
இந்தநிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இலங்கை அனுபவிக்கும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை கருத்தில் கொள்ளும்போது இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
பிரதிநிதிகளின் பயணத்தின் போது, இலங்கையின் தற்போதைய நிலை, மதிப்பாய்வு செய்யப்பட்டு அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் முடிவு எடுக்கப்படும்.
இதேவேளை இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளில் ஒன்று ஐரோப்பிய ஒன்றியம் என்பது குறிப்பிடத்தக்கது.