இச்சம்பவமானது உள்ளூர் நேரப்படி வெள்ளி-சனிக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள டர்ஹாம் பிராந்திய பொலிஸ் பிரிவில் மதுபான விடுதிக்கு வெளியே இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த இளைஞன் 28 வயதுடைய அருண் விக்னேஸ்வரராஜா என்ற தமிழ் இளைஞர் என போலீஸார் தெரிவித்தனர்.
சிறந்த கால்பந்தாட்ட வீரரான இவர் தமிழ் தேசிய விளையாட்டு அணிகளில் தீவிரமாக பங்குபற்றியவர் என தமிழ் வட்டாரங்கள் தெரிவித்தன.
பொலிஸ் அறிக்கைகளின்படி, அஜாக்ஸில் உள்ள கிங்ஸ் கேஸில் பார் மற்றும் கிரில்லுக்கு வெளியே வாகனத் தரிப்பிடத்தில் இருவர் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும் அவர்களில் ஒருவர் கத்தியை எடுத்து அடுத்தவரைப் பலமாகத் தாக்கிவிட்டு காரில் ஏறித் தப்பி சென்றதாக தகவல்கள் கூறுகின்றன.
அருண் விக்னேஸ்வரராஜா என்ற இளைஞன் பலத்த வெட்டுக்காயங்களுடன் ரெறென்ரோ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உயிரிழந்துள்ளார்.
அவரை வெட்டிவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.
கத்திக்குத்து சம்பவம் நடந்த அதே நேரத்தில், அருந்தகம் வாகன நிறுத்துமிடத்தில் டிரைவர் ஒருவர் தனது காரை அதிவேகமாக ஓட்டிச் சென்று ஒருவரை காயப்படுத்தியுள்ளார்.
போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரித்து வருவதாக டர்ஹாம் பிராந்திய போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் வருமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.