News

தமிழர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டவர் மீது கொடூர தாக்குதல்

கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக பதவிவகித்த காலப்பகுதியில் வெள்ளை வானில் தமிழர்கள் கடத்தப்பட்டு, முதலைக்கு இரையாக போடப்பட்டதாக பரபரப்பு தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தகவலை வெளியிட்டவர்களில் ஒருவர், வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக, 2019 நவம்பரில், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் செய்தியாளர் சந்திப்பொன்று நடந்திருந்தது. இந்த செய்தியாளர் சந்திப்பில்,வெள்ளை வானில் கடத்தல் மேற்கொள்ளும் அணியைச் சேர்ந்தவர்கள் என கூறப்பட்ட இரண்டு பேரும் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இவ்வாறு அழைத்துவரப்பட்டவர்கள் வெள்ளை வானில் கடத்தப்பட்ட தமிழர்கள் தொடர்பில் தகவல் வெளியிட்டிருந்தனர்.

இதற்கமைய கடத்திச்செல்லப்பட்ட தமிழர்களை முதலைக்கு இரையாக்கியதாக அதிர்ச்சி தகவலை அவர்கள் வெளியிட்டிருந்தனர்.

இதன் பின்னர், குறித்த நபர்கள் மீது பொலிஸார் வழக்கு தொடர்ந்து அவர்களை கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வழக்கின் இரண்டாவது சாட்சியாக மாறிய களனி பெத்தியகொட பிரதேசத்தைச் சேர்ந்த அத்துல சஞ்சீவ மதநாயக்க என்பவர் வெள்ளை வாகனத்தில் வந்த ஆயுதக் குழுவினால் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 5ஆம் திகதி முற்பகல் 11.00 மணியளவில் அவரது வீட்டில் தங்கியிருந்த போதே இந்த கடத்தல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டவர், தாக்கப்பட்டு பட்டியா சந்தி பகுதியில் விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் குண்டர் கும்பல் அத்துல மதநாயக்கவின் கண்களை துணியால் கட்டி வாகனத்தில் ஏற்றி அவரது ஒரு கை முறியும் வரை அடித்துள்ளது. அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உடைந்த கைக்கு சத்திரசிகிச்சை செய்து தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் அத்துல மதநாயக்கவின் மனைவி ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், சம்பவ தினதன்று, மதியம் பதினொரு மணியளவில், நாங்கள் குழந்தைகளுடன் வீட்டில் இருந்தபோது, எங்கள் வீட்டுக்கு நான்கு அந்நியர்கள் வந்தனர்.

கணவரை அறைக்கு இழுத்துச் சென்று மார்பில் அடித்தனர். அப்போது மூத்தமகன் படுக்கையில் தூங்கிக்கொண்டிருந்தான். மகனைஅறைக்கு வெளியே அனுப்பினர். அதன்பின், கணவனின் தலையில் துப்பாக்கியை வைத்து இழுத்துச் சென்றனர்.

வந்தவர்களில் இருவர் எங்களுடன் வீட்டில் தங்கினார்கள். என் மூத்த மகளின் தொலைபேசியையும் பறித்தனர். அதனால் பொலிஸாருக்கு தகவல் வழங்க முடியவில்லை. வாகனத்தில் கணவரைக் கொண்டு சென்று, அவரை கடுமையாக தாக்கி கையை உடைத்து,சந்தியில் விட்டுள்ளனர்.

கணவர் இறக்கி விடப்பட்டதும், வீட்டிலிருந்த இருவரும் வெளியேறினர்.

இச்சம்பவம் தொடர்பாக கணவர் பேலியகொடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். ஏழெட்டு பேர் சேர்ந்து தன்னை வாகனத்தில் ஏற்றியதாகவும், கண்களை கறுப்புத் துணியால் கட்டி அடித்ததாகவும் கணவர் கூறினார்.”என தெரிவித்துள்ளார்.

இந்த முதலை வழக்கில் தொடர்புடைய இருவருக்கும் பல தடவைகள் தொலைபேசிஅழைப்புகள் மூலம் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடத்தப்பட்டதன் பின்னர் அத்துல மதநாயக்க பேலியகொடை பொலிஸாருக்குச் சென்று சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் அத்துல மதநாயக்க, தனது உயிருக்கு பாதுகாப்பு வழங்காவிட்டால் அடுத்த தவணைக்கு நீதிமன்றத்தில் முன்னிலயாக முடியாது. என்னை கடத்த வந்தவர்கள் தன்னியக்க துப்பாக்கிகளை வைத்திருந்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மற்றைய நபரான சரத் எங்கிருக்கிறார் என தொடர்ந்து என்னிடம் விசாரணை நடத்தியதாகவும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், தனது உயிரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அத்துல மதநாயக்க இதன்போது தெரிவித்துள்ளார்.

இருப்பினும் வெள்ளை வானில் தமிழர்கள் கடத்தப்பட்டமை தொடர்பான தகவல்களை வெளியிட்டமை காரணமாகத் தான் அவர் கடத்தப்பட்டாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top