ஏற்றுக்கொள்ளக் கூடிய மக்கள் ஆணையைக் கொண்ட அரசாங்கம் அமையும் வரை இலங்கைக்கு சர்வதேச உதவிகளையோ அல்லது கடனுதவிகளையோ வழங்க முடியாது என உலகின் பலம் வாய்ந்த நாடுகள் உத்தியோகப்பூர்வமற்ற முறையில் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய நிபந்தனையான கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இந்த நாடுகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது இந்த அறிவிப்பு உத்தியோகபூர்வமற்ற முறையில் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான கலந்துரையாடல்களில், இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கு, சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய மக்கள் ஆணையுடன் கூடிய அரசாங்கம் இருக்க வேண்டும் என அந்த சக்தி வாய்ந்த நாடுகள் உத்தியோகபூர்வமற்ற முறையில் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளன.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கு பொறுப்பான குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் அவர்களும் இதனை வலியுறுத்தினார்.
சர்வதேச நாணய நிதியத்தால் முன்மொழியப்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதற்கு, மக்கள் ஆணையைக் கொண்ட அரசாங்கம் இருக்க வேண்டும் என்று இலங்கை செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், கடந்த வியாழன் அன்று, இலங்கைக்கு வழங்கப்படவுள்ள கடன் உதவிக்கான திகதியை குறிப்பிட முடியாது என பீட்டர் ப்ரூவர் ஊடக அறிக்கையொன்றில் தெரிவித்திருந்தார்.
டிசம்பர் மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு முதல் நிதியுதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அறிவித்துள்ள நிலையிலேயே பீட்டர் ப்ரூவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.