News

புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் பேச்சு – அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

 

பொறுப்பு கூறல் விடயத்தில் உள்ளக பொறிமுறையின் ஊடாகவே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சித்து வருகின்றோம்.அடுத்த மாதம் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளது.இந்த கலந்துரையாடல் வெற்றிபெற்றால் இலங்கை விடயத்தில் சர்வதேச தலையீடுகள் இருக்க மாட்டாது.

இவ்வாறு தெரிவித்துள்ளார் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச. நீதி அமைச்சில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

சர்வதேச பொறிமுறையின் ஊடாக சர்வதேசநிறுவனங்களின் கண்காணிப்பின் கீழ் உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க வேண்டும் என்பதே ஐ.நாவின் நோக்கமாக இருக்கிறது.எனினும் இப்பிரச்சினைகளை தீர்க்க இலங்கையே சில நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

தேசிய பொறிமுறையின் ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது. தேசிய பொறிமுறையின் ஊடாக சில பெறுபேறுகள் கிடைக்கும் பட்சத்தில் சர்வதேசத்தின் ஒத்துழைப்புகள் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் அதிக அக்கறையோடு செயற்பட்டு வருகிறது.இது தொடர்பில் நியமிக்கப்பட்ட விசேட குழு பல பரிந்துரைகளையும் வழங்கியிருக்கிறது. இப்பரிந்துரைகளின் அடிப்படையில் நடவடிக்கைஎடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் நானும் அதிபர் ரணிலும் பல்வேறு கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகிறோம். அடுத்த மாதமும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறும். இது வெற்றியடைந்தால், இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் தலையீடுகளை இல்லாது , இலங்கைக்கு ஆதரவளிக்கும் எனவும் தெரிவித்தார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top