இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சரியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென காணாமல் போனோரின் குடும்ப ஒன்றியத்தின் தலைவர் பிறிட்ரோ பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.
குற்றவாளிகள் தண்டிக்கப்படாத பட்சத்தில் அவர்கள் மீண்டும் இவ்வாறான செயல்களை செய்யக் கூடும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 32 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற நிகழ்வில் பிறிட்ரோ பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுவது என்பது உலகில் உள்ள அனைத்து குற்றங்களிலும் மிக கொடியது. அது ஒரு நீண்ட கால குற்றம்.
இவ்வாறான குற்றங்களின் மூலம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள்தொடர்பான உண்மை நிலையை சிறிலங்கா அரசாங்கம் எமக்கு அறியத் தர வேண்டும். ஏன் இவர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்பது குறித்த உண்மையையும் எதற்காக அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பது குறித்த காரணத்தையும் அரசாங்கம் எமக்கு தெரிவிக்க வேண்டும்.
கடந்த காலங்களில் இருந்த ஆட்சியாளர்கள் குற்றவாளிகளை தண்டிக்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அவர்களது குடும்பத்தினர் முன்வைக்கும் கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிப்பதோடு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
இலங்கையில் மீண்டும் அநீதியான செயல்கள் நடப்பதை தவிர்ப்பதற்காக குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதோடு அரசாங்கம் அதற்கான இழப்பீடை வழங்க வேண்டும்.
அரசியல் போர்வையின் கீழ் சட்டவிரோதமான வேலைகளில் ஈடுபடுவோர் அதனை நிறுத்த வேண்டும். இலங்கை மக்களுக்கு பிரச்சினையின் உண்மை நிலை குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.
அரசியல்வாதிகள் எம்மை தொடர்ந்தும் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். தற்போது அரசியலில் இருக்கும் தலைவர்களுக்கு உண்மையான நோக்கம் என்ற ஒன்று கிடையாது.
தேர்தல் காலங்களில் எமது வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக எமக்கு நீதியை பெற்று தருவதாக கூறுகிறார்கள். இவை அனைத்தும் எம்மை ஏமாற்ற அரசாங்கமும் அரசியல்வாதிகளும் முன்னெடுக்கும் நாடகம்” என்றார்.