களனி பல்கலைக்கழகத்தில் நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டத்தை சர்வதேச சமூகம் அவதானிக்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக அறிக்கையொன்றை மாணவர் சம்மேளனம் வெளியிட்டுள்ளது.
பல மாதங்களாக இலங்கை மக்கள் தாங்க முடியாத பொருளாதார அழுத்தத்தை எதிர்கொண்டு தமது வாழ்வுரிமையை கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டம் வெறும் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு அப்பாற்பட்ட அரசியல் சீர்திருத்தப் போராட்டமாக மாறியது. பொதுமக்களின் பெரும் அழுத்தத்தின் விளைவாக, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அரசியலமைப்பு சதித்திட்டத்தை முன்னெடுத்து ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க, மக்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும், அமைதியான கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவதற்குமான அடிப்படை உரிமைகளை கடுமையாக மீறும் வகையில், அடக்குமுறையின் பாரதூரமான நிகழ்ச்சி நிரலை பின்பற்றி வருகின்றார்.
இதன்கீழ் அண்மையில் நடத்தப்பட்ட அனைத்து அமைதியான போராட்டங்களும், மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மீறும் வகையில், கொடூரமாக நசுக்கப்பட்டதாக மாணவர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
எனினும் மக்களின் உரிமைகள் மீதான அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக தாம் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அந்த சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.
தமது மாணவர் தலைவர்களான வசந்த முதலிகே மற்றும் கல்வௌ சிறிதம்ம ஹிமி ஆகியோர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு 60 நாட்களாகியுள்ளதை குறிக்கும் வகையிலும், பொருளாதாரத் தீர்வுகளைக் கோரியும், களனிப் பல்கலைக்கழகத்தில் இருந்து நாளை (ஒக்டோபர் 18) ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கை அரசாங்கத்தின் கோழைத்தனமான அடக்குமுறை நாளையும் நடைபெறவிருப்பதால், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை மதிக்கும் இலங்கையில் உள்ள சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகளை நாளை (செவ்வாய்கிழமை) 18 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தை அவதானிக்கவும் கண்காணிக்கவும் வேண்டும் என்று சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.