மெக்சிகோவில் பள்ளி மாணவர்கள் 57 பேருக்கு மர்மமான முறையில் விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வடஅமெரிக்க நாடான மெக்சிகோ உலகளவில் போதைப்பொருள் புழக்கம் அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றாக உள்ளது. நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் ஆதிக்கம் மிகுதியாக உள்ளது.
இந்த நிலையில் அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கு மர்மமான முறையில் விஷம் கொடுக்கப்பட்டதும், அதன் பின்னணியில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் இருப்பதாக கூறப்படுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மெக்சிகோவின் தெற்கு மாகாணமான சியாபாசில் உள்ள கிராமப்புற மேல்நிலைப்பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை வழக்கம் போல் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தன. அப்போது மாணவர்கள் பலர் திடீரென வாந்தி எடுத்தபடியே மயங்கி விழுந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. இதை அறிந்து பதறிப்போன மாணவர்களின் பெற்றோர் அலறிதுடித்தபடி பள்ளிக்கு விரைந்தனர். பின்னர் பள்ளி ஊழியர்களும், பெற்றோரும் இணைந்து திடீர் உடல் நலக்குறைவுக்கு ஆளான 57 மாணவர்களை தூக்கி கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மாணவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சியாக தகவலை தெரிவித்தனர். போதைப்பொருள் கொடுக்கப்பட்டதா? இதைகேட்டு மாணவர்களின் பெற்றோர் கடும் கொந்தளிப்புக்கு ஆளாகினர். இதையடுத்து மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியின் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் மருத்து பரிசோதனையில் மாணவர்களின் உடலில் கொக்கைன் எனப்படும் போதைப்பொருள் கலந்திருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின.
கடந்த 2 வாரங்களில் சியாபாஸ் மாகாணத்தில் உள்ள வேறு 2 பள்ளிகளில் இதேபோல் மாணவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவர்களுக்கும் போதைப்பொருள் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றும், இந்த 3 சம்பவங்களின் பின்னணியில் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் பங்கு இருக்கலாம் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.
அதே வேளையில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் சிலர் பள்ளிக்கூடத்தில் வழங்கப்பட்ட அசுத்தமான குடிநீர் அல்லது உணவில் நச்சுத்தன்மை கலந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
எனினும் விசாரணைக்கு பிறகே உண்மை தெரியவரும் என தெரிவித்துள்ள சியாபாஸ் மாகாண போலீசார் இதுபற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகவும் கூறினர்.