ஐக்கிய நாடுகளின் சுற்றுச் சூழல் வேலைத்திட்டங்களுக்கான நிறைவேற்று பணிப்பாளர்களில் ஒருவரான எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்திய விமான சேவைக்கு சொந்தமான ஏ ஐ 271 என்ற விமானத்தில் இன்று அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைவார் என கூறப்படுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்புக்கு இணங்க நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவரான எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு விஜயம் முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில் இலங்கைக்கு வருகைத்தரவுள்ள எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவுள்ளார்.
இதேவேளை இலங்கை வரும் எரிக் சொல்ஹெய்ம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இருவரை கொழும்பில் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக எரிக் சொல்ஹெய்மின் நிகழ்ச்சி நிரலை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கை வருவதற்கு முன்னரே இலங்கையின் அரச தரப்பு, எதிர்த்தரப்பு மற்றும் நாடாளுமன்றததை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளின் சந்திப்புகள் திட்டமிடப்பட்டுள்ளதாக நோர்வே செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யார் கலந்து கொள்கிறார்கள் என்பது தொடர்பில் எந்தவித தகவலும் வெளியாகாத நிலையில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட உறுப்பினரிடம் இவை தொடர்பில் வினவிய போது, தமக்கு இது தொடர்பில் எவ்வித தகவலும் தெரியாது என்பதுடன், எரிக் சொல்ஹெய்ம் இலங்கை வரும் விடயமும் தெரியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் மத்தியிலும் இதே நிலைப்பாடே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் எரிக் சொல்ஹெய்மின் சந்திப்பு அரசியல் ரீதியாக எந்தளவு முக்கியத்துவமானது என்பது தெரியாவிட்டாலும், இந்த சந்திப்பில் இலங்கையில் இருக்கக்கூடிய பல தரப்புக்களை சந்திக்கின்றமை சர்வதேச ரீதியாக முக்கிய விடயமாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்து.
மேலும், நோர்வேயின் ராஜதந்திரியான எரிக் சொல்ஹெய்ம், இலங்கைக்கான நோர்வேயின் வௌிவிவகார ஆலோசகராக கடந்த 2000ஆம் ஆண்டு நோர்வே அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டார்.
இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு இடம்பெற்ற சமாதான பேச்சுவார்த்தையில் ஏற்பாட்டாளராக செயற்பட்டு தனது பங்களிப்பை வழங்கியிருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.