News

ரஷியா ஆக்கிரமித்த கெர்சன் நகரில் இருந்து பொதுமக்கள் உடனடியாக வெளியேற ரஷிய அதிகாரிகள் உத்தரவு

கெர்சன் நகரின் மீது உக்ரைன் ராணுவம் கடுமையான தாக்குதலை நடத்த வாய்ப்புள்ளதாக ரஷிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இதற்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. தற்போது வரை நீடித்து வரும் இந்த போரில், இரு தரப்பில் மிகப்பெரிய அளவில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த போரில் உக்ரைனில் பல்வேறு பகுதிகளை ரஷிய ராணுவம் கைப்பற்றியது. அந்த வகையில் உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களை சமீபத்தில் ரஷியா தன்னுடன் இணைத்துக்கொண்டது.

சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட 4 பிராந்தியங்களையும் ரஷியாவிடம் இருந்து மீட்டெடுக்க உக்ரைன் ராணுவம் கடுமையாக போராடி வரும் நிலையில், அந்த 4 பிராந்தியங்களிலும் ரஷிய அதிபர் புதின் ராணுவ சட்டத்தை அமல்படுத்தி உள்ளார்.

இந்த நிலையில் ரஷியா ஆக்கிரமித்த கெர்சன் நகரில் இருந்து பொதுமக்கள் உடனடியாக வெளியேற ரஷிய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கெர்சன் நகரின் மீது உக்ரைன் ராணுவம் கடுமையான தாக்குதலை நடத்த வாய்ப்புள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

எனவே கெர்சன் நகர மக்கள் நெய்பர் ஆற்றின் வழியாக படகுகள் மூலம் ரஷியாவின் அதிகாரப்பூர்வ எல்லைக்குள் வந்து சேர வேண்டும் என ரஷிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம் கெர்சன் நகர மக்கள் ரஷிய அதிகாரிகளின் உத்தரவுகளை ஏற்கக் கூடாது என்றும், ரஷியா அவர்களை மனித கேடயங்களாக பயன்படுத்த வாய்ப்புள்ளது என்றும் உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top