ரஷிய இராணுவ தளத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
உக்ரைன் அருகே ரஷிய ராணுவ துப்பாக்கிச் சூடு தளத்தில் இரண்டு தன்னார்வ வீரர்கள் மற்ற ராணுவவீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 11 பேர் கொல்லப்பட்டதாவும், மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் எல்லையை ஒட்டிய தென்மேற்கு ரஷியாவின் பெல்கோரோட் பகுதியில் நேற்று இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதல் என்று ரஷியா ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது.
முன்னதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் செப்டம்பர் 21 ஆம் தேதி அன்று வெளியிட்ட ராணுவ அணிதிரட்டல் அறிவிப்புக்கு பின், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் ரஷிய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். 80 பயிற்சி மைதானங்கள் மற்றும் ஆறு பயிற்சி மையங்களில் மக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.
இதனிடையே இராணுவத்தில் பணியாற்றியவர்கள் மட்டுமே அழைப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அதிபர் அறிவித்தாலும், ஆர்வலர்கள் மற்றும் உரிமைக் குழுக்கள் எந்தவொரு இராணுவ அனுபவமும் இல்லாமல் மக்களை இராணுவ கட்டாய அலுவலகங்கள் சுற்றி வளைப்பதாக தகவல் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் புதிதாக ராணுவத்தில் சேர அழைக்கப்பட்ட முன்பதிவு செய்பவர்களில் சிலர், தரையிலோ அல்லது வெளியிலோ தூங்குவதற்கு கட்டாயப்படுத்தப்பட்ட வீடியோக்களை வெளியிட்டனர். மேலும் அணிதிரட்டல் பெரும்பாலும் மோசமாக ஒழுங்கமைக்கப்பட்டதாக அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். நிலைமையை மேம்படுத்துவதாக உறுதியளித்திருந்தனர்.