ரஷ்யா கிரீமியாவுக்கிடையிலான பாலம் தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, ரஷ்யா உக்ரைன் மீது கடுமையான ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்து வரும் நிலையில், வான்வெளி தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் அமைப்பு ஒன்றை உடனடியாக உக்ரைனுக்கு வழங்க இருப்பதாக ஜேர்மனி அறிவித்துள்ளது.
அதோடு ரஷ்யா தாக்குதல்களை இழிவானது என விமர்சித்துள்ள ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Annalena Baerbock, உக்ரைனின் வான்பாதுகாப்பை வலுப்படுத்த அனைத்தையும் செய்துவருகிறோம் என்று ட்விட்டரில் வெளியிட்ட செய்தி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நகரத்தையே வான்வெளித்தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கக்கூடிய அதிநவீன Iris-T systems என்னும் அமைப்புகளை உக்ரைனுக்கு அளிக்க இருப்பதாக ஜூன் மாதத்திலேயே ஜேர்மன் சேன்சலரான ஓலா ஷோல்ஸ் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் பிற நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது வான்பாதுகாப்பு அமைப்புகளை உடனடியாக உக்ரைனுக்கு அளிக்கவேண்டும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளதாகவும் ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சரான Christine Lambrecht கூறியுள்ளார் .
ஜேர்மனி உக்ரைனுக்கு வழங்க இருக்கும் Iris-T system என்னும் பாதுகாப்பு அமைப்பு, 20 கிலோமீற்றர் உயரமும் 40 மீற்றர் அகலமும் கொண்ட, ஒரு நகரத்தையே ஏவுகணைத் தாக்குதலிலிருந்து பாதுகாக்கும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.