நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டெடுக்க வேண்டுமானால், ராஜபக்சக்கள் திருடிய டொலர்களை மீளக் கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
குருநாகல் தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறியதாவது,
“மக்கள் மீது வரி விதிக்காது, கடந்த ஒரு தசாப்த காலமாக பல்வேறு ஒப்பந்தங்கள், நிர்மாணப் பணிகள் சார்ந்த கொந்தராத்துகள், கொடுக்கல் – வாங்கல்கள் மூலம் ராஜபக்ச குடும்பத்தினரால் கொள்ளையடிக்கப்பட்ட நமது நாட்டின் செல்வத்தை மீட்டெடுத்து அதன் மூலம் அரச வருவாயை அதிகரிக்க முடியும்.
திருடர்களைப் பிடித்து அவர்களால் திருடப்பட்ட டொலர்களை மீண்டும் நாட்டுக்குக் கொண்டு வருவதன் மூலமும் நாட்டின் வருமானத்தைப் பெருக்க முடியும். பெரும் தொகை பணம் இவ்வாறு நாட்டுக்கு வெளியே உள்ளது.
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு இதுவே உடனடியான ஒரே தீர்வாக அமைய முடியும். எதிர்க்கட்சியாக எந்தவொரு அரசியல் பழிவாங்கலையோ அல்லது தனிநபர்களை குறிவைத்த அரசியல் பழிவாங்கல்களையே அங்கீகரிக்காவிட்டாலும், எமது நாட்டிலிருந்து திருடப்பட்ட அனைத்து டொலர்களும் எதிர்காலத்தில் நிறுவப்படவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அரசின் கீழ் கொண்டு வரப்படும். அந்த அரசின் அரச வருவாயை அதிகரிக்கும் அதிகாரம் நிதி அமைச்சருக்கும், திருடர்களைப் பிடிக்கும் அமைச்சருக்கும் வழங்கப்படும.
வணிகங்கள், கேள்வியும் நிரம்பலும், விநியோகம் போன்றவற்றைச் சுருக்கி தற்போதைய வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதே நடப்பு அரசின் பொருளாதாரக் கொள்கையாகும்.
தற்போது வட்டி விகிதம் கூட 30 சதவீதத்தைத் தாண்டிவிட்டது. தற்போதைய அரசு சாதாரண மக்கள் மீது வரிச்சுமையைச் சுமத்தாது கோடீஸ்வரர்கள் மீது அந்த வரிச்சுமை சுமத்தப்பட வேண்டும்.
ஐக்கிய அமெரிக்க குடியரசிலுள்ள சிலிக்கான் பள்ளத்தாக்கு போன்ற நகரங்கள் நம் நாட்டிலும் உருவாக்கப்பட வேண்டும். நாட்டின் டொலர் நெருக்கடியைத் தீர்க்க தகவல் தொழில்நுட்பத்தை நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.