News

எம்.பி. பதவி பறிப்பு எதிரொலி: பாகிஸ்தானில் இம்ரான்கான் கட்சியினர் போராட்டம்- கண்ணீர் புகை குண்டுவீச்சு

இம்ரான்கான் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், பதவி வகித்த காலத்தில் அரபு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டபோது தனக்கு அளிக்கப்பட்ட விலை உயர்ந்த பரிசு பொருட்களை அரசின் கஜானாவில் வைத்தார்.

பின்னர் அந்த பரிசு பொருட்களை சலுகை விலையில் பெற்று அதிக விலைக்கு விற்றார். ஆனால் அதை வருமான வரி தாக்கலில் மறைத்ததாக இம்ரான்கான் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்யப்பட்டதையடுத்து விசாரணை நடந்தது.

இந்த விசாரணையின் தீர்ப்பை நேற்று தேர்தல் கமிஷன் வழங்கியது. இதில் இம்ரான்கானின் எம்.பி. பதவியை பறித்தும், 5 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை விதித்தும் தீர்ப்பை அளித்தது. மேலும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இம்ரான்கான் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டதால் அவரது கட்சி (பாகிஸ்தான் தெக்ரின்-இ-இன்சாப்) தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இம்ரான்கான் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும் இஸ்லாமாபாத் விரைவு சாலையில் இம்ரான்கான் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. பைசாபாத்தில் போராட்டக்காரர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.

பெஷாவர் நகரில் முக்கிய சாலைகளில் மறியலில் ஈடுபட்டனர். அங்குள்ள நெடுஞ்சாலையில் டயர்களை போட்டு எரித்தனர். கராச்சியில் பாகிஸ்தான் தெக்ரிச்-2 இன்சாட் கட்சி தலைவர்கள், தொண்டர்கள், தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். அப்போது அலுவலகத்துக்குள் நுழைய முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விரட்டி அடித்தனர்.

இதேபோல் லாகூர் முல்தான் உள்பட நாடு முழுவதும் இம்ரான்கான் கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர் போராட்டம் காரணமாக பாகிஸ்தானில் பதற்றம் நிலவுவதால் போலீசாரும், ராணுவத்தினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து இம்ரான்கான் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்து உள்ளார்.இந்த வழக்கை தலைமை நீதிபதி அதர் மினல்லா அக்டோபர் 24 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்வார்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top