ஐ.நா மனித உரிமை பேரவையில் இந்த மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கைத் தீர்மானத்தில் இலங்கையில் மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்கும் திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் போர்க்காலத்தில் காணாமால் ஆக்கப்பட்ட தமிழர்கள் வெளிநாடுகளில் வசிப்பதான பரப்புரைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் சிறிலங்கா அரசாங்கத்தின் அனுசரனையுடன் செயற்படும் ஒ.எம்.பி எனப்படும் காணாமல் போனோருக்கான பணியகமும் இந்த பரப்புரைக்கு தற்போது துணைபோய் காணாமல் ஆக்கப்பட்டவர்களில் ஐம்பது பேருக்கு மேல் வெளிநாடுகளில் வசிப்பதான கருத்து, மனித உரிமை ஆர்வலர்களை விசனப்படுத்தியுள்ளது.
இலங்கையில் மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு வெளிநாடுகளிலேயே சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கோரப்பட்டிருந்தது.
அதற்கு அப்பால் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏற்கனவே ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் தகவல் காப்பகத்தில் உள்ள தகவல்களையும் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு பயன்படுத்தப்படுமாறும் கோரப்பட்டிருந்தது.
இந்தத் தீர்மானத்தில் இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வெளிநாட்டு அரசாங்கங்கள் சட்ட நடவடிக்கை எடுக்காவிட்டாலும், தனிநபர்கள் மற்றும் அமைப்புகளும் வழக்குகளைத் தாக்கல் செய்யலாம் எனவும் குறிப்பிட்பட்டிருந்தது.
இந்த நிலையில் எதிர்வரும் நாட்களில் இவ்வாறான நகர்வுகள் வரும் என்பதை ஊகித்துள்ள சிறிலங்கா, தற்போது இலங்கையில் போர்க்காலத்தில் காணால் ஆக்கப்பட்ட தமிழர்களில் சிலர் வெளிநாடுகளில் உயிருடன் வசிப்பதான பரப்புரைகளை ஆரம்பித்துள்ளது.
அந்த வகையில், இலங்கையில் தமிழர்கள் மீதான இனப்படுகொலை நடைபெறவில்லை எனவும் மாறாக இறுதிக்கட்ட யுத்தத்தின் போது 60 ஆயிரம் பொதுமக்களை சிறிலங்கா இராணுவம் காப்பாற்றியதாக அறிக்கையிட்டுள்ள ஒ.எம்.பி எனப்படும் காணாமல் போனோருக்கான பணியகம், ஏற்கனவே காணாமல் போனதாக கூறப்படும் 50 பேர் தற்போது வெளிநாடுகளில் வசிக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது