News

போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு: கொழும்பில் ராணுவம் பலத்த பாதுகாப்பு

 

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அவதிக்குள்ளான மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதிபர் மாளிகை, அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடந்தது. இதனால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினர்.

அதேபோல் ராஜபக்சே குடும்பத்தினர் வகித்த அரசு பதவிகளை ராஜினாமா செய்தனர். அதன்பின் அதிபராக ரனில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனாலும் இலங்கையில் தொடர்ந்து பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.

விலைவாசி உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாட்டால் மக்கள் தவித்து வருகிறார்கள். இந்தநிலையில் இலங்கையின் பிரபல இடதுசாரி கட்சியும், எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜனதா விமுக்தி பெரமுனா (ஜே.ஜி.பி.) இன்று போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.

பொருளாதார நெருக்கடியை தீர்க்காததால் அரசை கண்டித்து தலைநகர் கொழும்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தது.

இப்போராட்டத்துக்கு நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்களை திரட்டி கொழும்புக்கு கொண்டு வர நடவடிக்கைகளை அக்கட்சி எடுத்தது.

இதையடுத்து கொழும்பு நகரை நோக்கி ஏராளமானோர் நள்ளிரவு முதலே புறப்பட்டனர். இன்று காலை கொழும்பு அருகே ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.

போராட்டம் காரணமாக கொழும்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராணுவத்தினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வாகனங்களில் ரோந்து சுற்றி வருகிறார்கள். அதிபர் மாளிகை உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய சாலைகள் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கொழும்பு நகரில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

இலங்கை அதிபராக ரனில் விக்ரமசிங்கே பொறுப்பேற்ற பிறகு போராட்டங்களை ஒடுக்க நடவடிக்கைகளை எடுத்தார். கொழும்பில் முக்கிய பகுதிகளை உயர்மட்ட பாதுகாப்பு மண்டலங்களாக அறிவித்தார். சில நாட்களாக இலங்கையில் போராட்டம் ஓய்ந்து இருந்த நிலையில் மீண்டும் இன்று மிகப்பெரிய போராட்டத்தை நடத்த எதிர்க்கட்சி அழைப்பு விடுத்து இருப்பதால் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top