News

100 பெட்டிகளுடன் 1.9 கி.மீ நீளம் கொண்ட உலகின் மிக நீளமான பயணிகள் ரெயில் இயக்கம் – சுவிஸ் ரெயில்வே சாதனை!

உலகின் மிக நீளமான பயணிகள் ரெயில் சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலை வழியாக இயக்கப்பட்டது.

சுவிட்சர்லாந்து ரெயில்வேயின் 175ஆம் ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், ஆல்ப்ஸ் மலைத்தொடர் வழியாக 100 பெட்டிகள் இணைக்கப்பட்ட 1.9 கி.மீ நீளம் கொண்ட மிக நீண்ட பயணிகள் ரெயிலை இயக்கி சுவிஸ் ரெயில்வே புதிய சாதனை படைத்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் பிரிடா முதல் பெர்குயன் பகுதி வரை ஆல்ப்ஸ் மலைத் தொடரில் அல்புலா/பெர்னினா ரெயில் வழித்தடம் அமைந்துள்ளது.

இந்த அல்புலா/பெர்னினா ரெயில் வழித்தடம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக 2008இல் அங்கீகரிக்கப்பட்ட வழித்தடம் ஆகும். இந்த வழித்தடம், பனி போர்த்திய மலையின் இடையே இயற்கை அழகை ரசித்து செல்லும்படி 22 சுரங்கங்கள், 48 பாலங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. பிரிடா முதல் பெர்குயன் பகுதி வரை 25 கி.மீ தூரத்தை ரெயிலில் கடக்க 1 மணி நேரம் ஆகும்.

இது குறித்து ரெயில்வே இயக்குனர் ரெனேட்டோ பெசியாட்டி கூறுகையில், சுவிட்சர்லாந்தின் சில பொறியியல் சாதனைகளை வெளிக்காட்டி முன்னிலைப்படுத்தவும், சுவிஸ் ரெயில்வேயின் 175ஆம் ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், மிக நீண்ட பயணிகள் ரெயிலை இயக்கியிருப்பதாக கூறினார்.

அதன்படி நேற்று 4 என்ஜின்கள், 100 பெட்டிகள் கொண்ட 1.9 கி.மீ தூரத்திற்கு நீண்ட ரெயில் இயக்கப்பட்டது. இதன் மூலம், உலகின் மிக நீளமான பயணிகள் ரெயிலை இயக்கி சுவிஸ் ரெயில்வே சாதனை படைத்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top