News

இந்தோனேசிய நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 310 ஆக உயர்வு; மீட்பு பணியில் 6 ஆயிரம் பேர்

இந்தோனேசிய நிலநடுக்க பலி எண்ணிக்கை 310 ஆன நிலையில், மீட்பு பணியில் 6 ஆயிரம் பேர் ஈடுபட்டு உள்ளனர்.

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் நகரில் கடந்த திங்கட்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவு கோலில் 5.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தினால், வீடுகள், அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட பல கட்டிங்கள் இடிந்து விழுந்தன. இதில் 162 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 700-க்கும் கூடுதலானோர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்து நடந்தது. அந்த வகையில் கடந்த புதன் கிழமை காலை இடிபாடுகளில் இருந்து மேலும் 90 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதனால், பலி எண்ணிக்கை 252 ஆக உயர்ந்தது.

இதன்பின், நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்தது. இறந்தவர்களில் பலர் குழந்தைகள். மேலும் 100-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. இந்த நிலையில், இந்தோனேசிய நிலநடுக்க பகுதியில் தொடர்ந்து மீட்பு பணி நடந்தது. இதில், நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக உயர்ந்து உள்ளது. இன்னும் 24 பேரை காணவில்லை என அந்நாட்டு தேசிய பேரிடர் மீட்பு கழகம் தெரிவித்து உள்ளது.

இதற்கு முன்பு மேஜர் ஜெனரல் சுஹர்யான்தோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நிலநடுக்கத்திற்கு பலியானவர்களில் 3-ல் ஒரு பங்கினர் குழந்தைகள் என உறுதி செய்துள்ளார். 2,043 பேர் காயமடைந்து உள்ளனர். 61,800 பேர் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர் என கூறியுள்ளார். 56,320 வீடுகள் சேதமடைந்தும், அவற்றில் 3-ல் ஒரு பங்கு வீடுகள் அதிக அளவில் மோசமடைந்தும் உள்ளது. இதுதவிர, 31 பள்ளிகள், 124 வழிபாட்டு தலங்கள் மற்றும் 3 சுகாதார வசதி மையங்களும் நிலநடுக்கத்தில் சேதமடைந்து உள்ளன.

நிலநடுக்க பகுதிகளை கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிபர் ஜோகோ விடோடோ நேரில் சென்று பார்வையிட்டார். வீடுகளை இழந்த உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகையும் அறிவிக்கப்பட்டு உள்ளது. நிலநடுக்கம் பாதிப்பை எதிர்கொள்ளும்படியான வீடுகள் மீண்டும் கட்டப்பட வேண்டும் என்று விடோடோ பேசியுள்ளார். எனினும், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top