News

இலங்கைக்கு திருப்பி அனுப்பினால் உயிரை மாய்த்துக்கொள்வோம்!நடுக்கடலில் மீட்கப்பட்ட இலங்கையர்கள் மிரட்டல்

சிங்கப்பூர் கடற்பரப்பில் மூழ்கிய நிலையில் காணப்பட்ட கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 300க்கும் அதிகமான இலங்கை அகதிகளை வியட்நாம் தமது நாட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளது.

கனடாவிற்கு தஞ்சம் கோரிச் சென்ற 264 ஆண்கள், 19 பெண்கள் மற்றும் 20 குழந்தைகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு மீட்கப்பட்ட அகதிகள்  வியட்நாம் துறைமுகத்திற்கு கொண்டு சென்று வியட்நாமில் உள்ள தற்காலிக முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில்,தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வியட்நாம் அதிகாரிகள் முயற்சித்தால் அதற்கு இணங்கப் போவதில்லை எனவும் தங்களது உயிரை தாங்களே மாய்த்துக் கொள்வதாகவும் நடுக்கடலில் மீட்கப்பட்ட இலங்கை அகதிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் உயிர்வாழ முடியாத நிலை காணப்படுவதால் நாட்டை விட்டு தப்பி வந்துள்ளதாகவும் அதனால் ஐக்கிய நாடுகள் சபை தங்களை பொறுப்பேற்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கை திரும்புவதற்கு விருப்பம் இல்லை என தெரிவித்து இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் உணவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக சர்வதேச தகவல்கள் தெரிவித்துள்ளன.

புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பான IOM அகதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

இதன்போது, அவர்களை திருப்பி அனுப்புவதற்கான சாத்தியக்கூறு இல்லை என IOM இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களிடம் உறுதியளித்துள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இதேவேளை, வியட்நாமில் மீட்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் மத்தியில் படகின் மாலுமி இருக்கவில்லை என மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LADY R3 படகு மூழ்கிய சந்தர்ப்பத்தில் படகை மாலுமி கைவிட்டுச் சென்றுள்ளதாக மீட்கப்பட்ட இலங்கையர்களை மேற்கோள் காட்டி வியட்நாம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top