News

 உக்ரைன் போர்: ரஷியாவுக்கு டிரோன்கள் வழங்கியதை ஒப்புக்கொண்ட ஈரான்

ரஷியாவுக்கு டிரோன்கள் வழங்கியதை ஈரான் முதல் முறையாக தற்போது ஒப்புக்கொண்டுள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது 9 மாதங்களாக போர் தொடுத்து வரும் ரஷியா, கடந்த சில வாரங்களாக வெடிகுண்டு டிரோன்கள் மூலம் உக்ரைன் நகரங்களில் சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது.

உக்ரைனின் முக்கிய மின்நிலையங்கள் மற்றும் பொது உள்கட்டமைப்புகளை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

ரஷியா தாக்குதலுக்கு பயன்படுத்தி வரும் டிரோன்கள் ஈரானால் ரஷியாவுக்கு வழங்கப்பட்டவை என அமெரிக்கா மற்றும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

மேலும் ஈரான், ரஷியாவுக்கு தொடர்ந்து டிரோன்களை வழங்கி வருவதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை அந்த நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் ஈரான் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்து வந்தது.

இந்த நிலையில் ரஷியாவுக்கு டிரோன்கள் வழங்கியதை ஈரான் முதல் முறையாக தற்போது ஒப்புக்கொண்டுள்ளது. ஈரான் வெளியுறவு மந்திரி ஹொசைன் அமிரப்டோலாஹியன் கூறுகையில், ” ரஷியாவுக்கு குறைந்த எண்ணிக்கையிலான டிரோன்களை வழங்கினோம். ஆனால் உக்ரைன் போருக்கு சில மாதங்களுக்கு முன்பே அவற்றை வழங்கினோம்.

ரஷியா உக்ரைனில் ஈரான் டிரோன்களை பயன்படுத்தியதற்கான ஏதேனும் ஆவணங்கள் அவர்களிடம் (உக்ரைன்) இருந்தால், அவர்கள் அவற்றை எங்களிடம் வழங்க வேண்டும். உக்ரைனுக்கு எதிரான போரில் ஈரான் டிரோன்களை ரஷியா பயன்படுத்தியது என்பது நிரூபிக்கப்பட்டால், இந்த விஷயத்தில் நாங்கள் அலட்சியமாக இருக்க மாட்டோம்” என்றார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top