கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 600 ரஷ்ய போர் வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என உக்ரைன் அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் ஒற்றை பகுதியாக அறிவிக்கப்பட்ட கெர்சன் பிராந்தியத்தை கைப்பற்ற ரஷ்ய படைகள் முழுவீச்சில் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில் எதிர்வரும் வாரங்களில் உக்ரைன் மற்றும் ரஷ்ய படைகளுக்கு இடையே கடுமையான சண்டை இருக்கும் எனவும் இரத்த ஆறு ஓடும் எனவும் உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.
உக்ரைனின் கெர்சனில் ரஷ்யா மரண அடி வாங்கும் எனவும், பிராந்தியத்தை விட்டே அவர்கள் மொத்தமாக வெளியேறுவர் எனவும் முக்கிய தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கெர்சனில் எதிர்வரும் வாரங்களில் ரத்த ஆறு ஓடும் என்றே உக்ரைன் தரப்பு கூறி வருகிறது. கெர்சன் நகரை தக்க வைத்துக்கொள்ள உக்ரைன் கடுமையாக போராடும் என்ற நிலையில், கிரிமியாவுக்கான முக்கிய வழித்தடமாக கருதப்படும் கெர்சன் நகரை கைப்பற்ற ரஷ்யாவும் முழுவீச்சில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கெர்சனில் இருந்து வெளியேற்றப்பட்டால் அது உண்மையில் பெரும் பின்னடைவாகவே கருதப்படும் என ரஷ்ய தரப்பு கூறியுள்ளது.
ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையின் தாயகமா கிரிமியா உள்ளது, மேலும் கிரிமியா தீபகற்பத்தை மீட்பதே உக்ரைனின் உறுதியான இலக்காக அவர்கள் தற்போது மாற்றிக்கொண்டுள்ளனர்.
செப்டம்பர் 30ம் திகதி பெரும் விழா ஒன்றில் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட நான்கு உக்ரைன் பகுதிகளில் கெர்சனும் ஒன்று. ஆனால் அதன் பின்னர் கெர்சனின் முக்கிய பகுதிகளை உக்ரைன் மீட்டுள்ளது.
இந்த நிலையில் கெர்சன் கைவிட்டுப் போகும் என்றால் அரசியல் ரீதியாக விளாடிமிர் புடினுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படும்.
இதனிடையே, சமீபத்திய வாரங்களில் கெர்சன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் டினிப்ரோவின் கிழக்குப் பகுதிக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ரஷ்ய துருப்புகளின் தொடர் தாக்குதல்களால் உக்ரைன் தரப்பும் கடுமையான பின்னடைவுகளை எதிர்கொண்டு வருவதாகவே கூறப்படுகின்றது.