ராஜபக்ச புதல்வரின் தலையீட்டுடன் பாவனைக்கு உதவாத 27000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று(04.11.2022) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,“நாட்டில் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமெனில், எரிபொருளுடன் வருகை தரும் கப்பல்களுக்கான தாமதக் கட்டணம் செலுத்துவதை நிறுத்த வேண்டும்.
வருகை தரும் கப்பல்களுக்குரிய கட்டணங்களை அவ்வப்போது செலுத்தினால் மாத்திரமே எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண முடியும்.
கடந்த 48 நாட்களாக மசகு எண்ணெய் கப்பலொன்று கடலில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பல நாட்களாக நங்கூரமிடப்பட்டுள்ள கப்பல்களுக்கு செலுத்த வேண்டிய தாமதக் கட்டணம் சுமார் 250 கோடி ரூபாவை அண்மித்துள்ளது.
ஒரு மாதத்திற்கு தேவையான சமையல் எரிவாயுவை இந்த தொகையில் இறக்குமதி செய்ய முடியும்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சிறந்த அமைச்சரவை நிர்வாகம் இவ்வாறு தான் காணப்படுகிறது. இது மாத்திரமின்றி 27000 மெட்ரிக் தொன் பாவனைக்கு உதவாத மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
ராஜபக்ச புதல்வர்களில் ஒருவர் இதனுடன் தொடர்புபட்டுள்ளார். சிறந்த நிர்வாகி என போற்றப்படும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இதற்கு அனுமதியளித்துள்ளார்.
எரிபொருள் கப்பல்களுக்கு செலுத்தப்பட வேண்டியுள்ள தாமதக் கட்டணங்கள் தொடர்பிலும், பாவனைக்கு உதவாத மசகு எண்ணெய் கப்பல் தொடர்பிலும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை சேகரித்து அவற்றை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துவோம்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியின் கீழ் எரிபொருள் வரிசை மாத்திரமே குறைவடைந்துள்ளது. தற்போதுள்ளதை விட கடும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்வரும் மாதங்களில் எதிர்கொள்ள நேரிடும்.”என கூறியுள்ளார்.