News

கடும் நெருக்கடிகளுக்கு நடுவில்… மொத்தம் 60 கப்பல்களில் உணவு தானியங்களை அனுப்ப: உக்ரைன் அதிரடி முடிவு

ரஷ்ய போரால் கடும் நெருக்கடிகளுக்கு தள்ளப்பட்டுள்ள உக்ரைன் நாடு, ஆப்பிரிக்காவின் மிகவும் ஏழையான நாடுகளுக்கு 60 கப்பல்களில் உணவு தானியங்களை அனுப்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தானிய கப்பல்கள் 2023 மத்தியில் உக்ரைனில் இருந்து புறப்படும் என ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உறுதி அளித்துள்ளார். உக்ரைன் போரினால் தானியங்கள் ஏற்றுமதிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், பல ஆப்பிரிக்க நாடுகள் உணவு தானிய பற்றாக்குறையால் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளது.

உக்ரைனில் இருந்து வெளியேறும் அந்த 60 கப்பல்களும் சூடான், ஏமன் மற்றும் சோமாலியா நாடுகளில் உள்ள அப்பாவி மக்களின் பசியை போக்கும் என்றார் ஜெலென்ஸ்கி. ஆனால், சர்வதேச சமூகம் போதிய ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே இந்த திட்டம் அமுலுக்கு வரும் எனவும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

குறித்த திட்டமானது பல நாட்டு அரசாங்கங்கள், தனியார் அமைப்புகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் சார்பில் முன்னெடுக்கப்பட உள்ளது. முதல் மூன்று கப்பல்கள் உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தை விட்டு சூடான், சோமாலியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளுக்கு செல்லவிருக்கிறது.

இதனிடையே, ஜேர்மனியின் நிதியுதவியுடன் கூடிய கப்பல் ஒன்று ஏற்கனவே எத்தியோப்பியாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளது. 1932-33 காலகட்டத்தில் மனிதனால் உருவாக்கப்பட்ட பஞ்சத்தில் மில்லியன் கணக்கான உக்ரேனியர்கள் பட்டினியால் இறந்த, ஹோலோடோமரின் ஆண்டு விழாவில் தான் இந்த திட்டத்தை தொடங்குவதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மேலும், உணவுப் பற்றாக்குறை, பாழாகும் விளைநிலங்கள் மற்றும் பரவலான மின்வெட்டு ஆகியவற்றுடன் நாடு போராடும் போதும், ஒரு பொறுப்புள்ள உலகளாவிய குடிமகனாக நமது பங்கை நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம் என தெரிவித்துள்ள ஜெலென்ஸ்கி,

உக்ரைன் தேசமும் கடும் பஞ்சத்தை அனுபவித்திருக்கிறது என்பதை மறந்துவிடவில்லை என்றார். இதனிடையே, மேலும் 120 நாட்களுக்கு கருங்கடல் பாதை வழியாக தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கு ரஷ்யா ஒத்துழைக்கும் என கடந்த வாரம் உறுதி அளித்துள்ளது.

இருப்பினும், விலைவாசி உயர்வு உச்சம் தொட்டுள்ளதால் சில ஏழ்மை நிலையில் இருக்கும் நாடுகள் தானியங்களை இறக்குமதி செய்ய முடியாமல் தத்தளிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எகிப்து மற்றும் மடகாஸ்கர் ஆகிய நாடுகள் 70-80% க்கும் அதிகமான தங்களின் கோதுமை தேவைக்கு ரஷ்யா அல்லது உக்ரைனை நம்பியுள்ளன. சோமாலியா தங்களது கோதுமைத் தேவையில் 90%க்கும் அதிகமாக இறக்குமதி செய்கிறது.

எரித்திரியா தங்களுக்கு தேவையான 100% தானியத்தை உக்ரைன் மற்றும் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top