News

சர்வதேச ரீதியில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக ரணில் செய்த சதி! 

இனப்பிரச்சினை விவகாரத்தில் நம்பிக்கை கொடுக்கும் வகையில் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகள் அமைந்திருந்ததில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களுடைய பிரச்சினை என்று கூறுகின்றபொழுது இனப்பிரச்சினை, பொறுப்புக்கூறல்,  தமிழர் தாயகத்தில் தமிழரின் இருப்பை இல்லாமல் செய்கின்ற நடவடிக்கையை தடுத்து நிறுத்துவது போன்ற மூன்று விடயங்களை தான் நாங்கள் கூடுதலாக பேசுவதாக இருக்கவேண்டும்.

இனப்பிரச்சினை விவகாரத்தில் நம்பிக்கை கொடுக்கும் வகையில் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகள் அமைந்திருந்ததில்லை. இதனை நான் பல தடவைகள் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

இறுதியாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் ஒரு வருடம் கழித்து அவர் (ரணில் விக்ரமசிங்க) நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் ஒரு சந்திப்பை நடத்தியிருந்தார்.

அந்த சந்திப்பில், இனப்பிரச்சினை சம்பந்தமாக அவர் எங்களுடன் பேசிய பொழுது,சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான ஒரு சமஷ்டி தீர்வு என்று நாங்கள் அவரிடம் வலியுறுத்திய பொழுது, அதனை அவர் நிராகரித்ததுடன், அது நடைமுறைச்சாத்தியமற்றது என்ற கருத்தை எங்களுக்கு தெரிவித்திருந்தார்.

அதேபோல்,ரணில் விக்ரமசிங்க பிரதமராக பொறுப்பேற்பதற்கு முதல்நாள் என்னை வந்து சந்தித்தபொழுதும் கூட அதே விடயத்தையே என்னிடம் வலியுறுத்தியிருந்தார்.

ஆகவே எங்களை பொறுத்தவரை இனப்பிரச்சினை தீர்வுக்கு சமஷ்டி தீர்வை பற்றி பேச தயாரில்லாத தரப்போடு பேச்சுக்கு செல்வதாக கூறுவது என்பது மக்களை ஏமாற்றும் ஒரு செயலாகவே இருக்கும்.

தமிழ் தேசத்தின் இருப்பை உறுதிப்படுத்துவதற்கு இருக்கின்ற ஒரே ஒரு வழி சமஷ்டி தீர்வு மாத்திரம்தான். அந்த தீர்வை பற்றி பேச தயாரில்லாத ஒரு இடத்தில் போய் பேசுவதில் எந்த பிரயோசனமும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை.

ஜனநாயக ரீதியில் தெரிவாகாத-மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு தலைவருக்கு -ஆட்சிக்கு தமிழ் மக்கள் சென்று அந்த தலைவருக்கும் அரசுக்கும் அங்கீகாரம் கொடுக்கவேண்டுமென்ற தேவை எங்களுக்கு இல்லை.

நாடாளுமன்றத்தில் எங்களுக்கு கிடைக்கின்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் தமிழர் தாயகத்தில் இடம்பெறுகின்ற அநீதிகள் சம்பந்தமாக சுட்டிக்காட்டி வருகின்றோம்.

வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்கின்ற வேளைகளிலும் கூட தொடர்ச்சியாக இந்த யதார்த்தத்தை தெளிவுபடுத்தி வருகின்றோம்.

ரணில் விக்ரமசிங்க தமிழீழ விடுதலைப்புலிகளுடன் பேச்சுக்கு வந்து போர்நிறுத்த உடன்படிக்கையை செய்தார். அதேசமயம், சமாந்தரமாக தமிழீழ விடுதலைப்புலிகளை சர்வதேச மட்டத்தில் ஓரங்கட்டுவதற்கான முயற்சிகளையும் செய்தார்.

ஒருபக்கம் பேச்சுவார்த்தை என்று ஈடுபட்டுக்கொண்டு மறுபக்கம் வீழ்ந்துபோயிருந்த இலங்கை இராணுவத்தின் பலத்தை 2003 காலப்பகுதியில் 3 மடங்காக பலப்படுத்தியிருந்தார்.

செய்வது ஒன்று.மறுபக்கம் அதற்கு நேர்மாறாக நடந்துகொள்வது தான் அவருடைய வரலாறு. இது தான் ரணில் விக்ரமசிங்க. இந்த தடவையும் அதனை செய்வதற்கே அவர் முயல்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top