News

தமிழரின் நினைவேந்தல் உரிமையை கட்டுப்படுத்தாதீர் – அரசிடம் சாணக்கியன் வலியுறுத்து

 

தமிழர்களுக்கான நினைவேந்தல் உரிமையை அரசு கட்டுப்படுத்தக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மாவீரர் தின நினைவேந்தலை அடுத்து வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் மாவீரர் துயிலும் இல்லங்கள் துப்பரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நினைவேந்தல் ஏற்பாட்டுப் பொதுக்கட்டமைப்பு மற்றும் பொதுமக்களின் ஏற்பாட்டில் வாகரை – கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தைத் துப்பரவு செய்யும் பணி நேற்று முன்னெடுக்கப்பட்டது.

நினைவேந்தல் ஏற்பாட்டுப் பொதுக்கட்டமைப்பின் உறுப்பினர்கள், பிரதேச பொதுமக்கள் கலந்துகொண்டு மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவுப் பணியை மேற்கொண்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனும் சென்று துப்பரவுப் பணியைப் பார்வையிட்டதோடு தானும் கலந்துகொண்டார்.

அதன்போது கருத்து வெளியிட்ட சாணக்கியன் எம்.பி., “மக்கள் இந்தச் சிரமதானப் பணியில் மிகவும் உணர்வுபூர்வமாகக் கலந்துகொண்டிருக்கின்றனர். இதற்கு அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது. இருந்தபோதிலும் எமக்கான உரிமைகளில் இதுவும் ஒன்று.

எமது அரசியல் உரிமைக்காக – எமது விடுதலைக்காகப் போராடியவர்களை அவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உணர்வுபூர்வமாக நினைவுகூரும் இந்த நிகழ்வானது எதிர்வரும் காலங்களில் எவரிடமும் அனுமதி கோரி செயற்படுத்தும் நிகழ்வாக இருக்கக்கூடாது. எமக்கான உரிமையை – எமது சுதந்திரத்தை அரசு கட்டுப்படுத்தக்கூடாது” – என்றார்

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top