News

தாயக விடுதலைக்காக மாவீரர் சிந்திய குருதி வெல்வது உறுதி – சீமான் ஆதங்கம்

ஆயுத போராட்டத்தை கைவிட்டால் சமாதானத்தைப் பெற்றுத்தருவதாக சர்வதேச நாடுகள் உறுதியளித்த போதிலும் இதுவரை காலமும் அது நடக்கவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மாவீரர் நாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 

தாயக விடுதலைக்காக தன் உயிரை விதையாக விதைத்த மாவீரர் தெய்வங்களின் ஈகத்திருநாள். தமிழீழத் தாயகம் விடுதலைப்பெற, ஆர்ப்பரித்து எழுந்த ஆயிரமாயிரம் மாவீரர்களை நினைவு கூறும் புனித நாள்.

தாயக விடுதலை என்கின்ற ஒற்றை இலக்கிற்காக குருதி சிந்தி, உயிரை விலையாக கொடுத்து வீரத்தின் இலக்கணமான மாவீரர்கள் நம் நெஞ்சம் முழுக்க நிறைகின்ற உணர்ச்சி நாள்.

தமிழீழ நாடு என்பது வெறும் நிலப்பரப்பு அல்ல. அது ஒரு கனவு தேசம். சாதி ஏற்றத் தாழ்வுகள் இல்லாத, அனைத்தும் தாய் மொழியில் அமைந்து, தற்சார்பு பொருளாதார வாழ்வோடு இணைந்து , பெண் விடுதலை, பாதுகாப்பான வாழ்வு என தலைவர் காட்டிய வழியில் தழைத்த சுதந்திரப் பயிர். அதை கருக விடாமல், தன்னைக் கருக்கி காத்தவர்கள் நம் மாவீரர்கள்.

யுத்தத்திற்கு பின்னரும் தமிழர் தாயக பகுதிகளில் போரின் போது விசாரணை என்ற பெயரில் வெள்ளை வானில் கடத்தப்பட்டோர் அனைவருக்கும் என்ன ஆனது என கண்ணீர் வடிக்கும் தாய்மார் எவரிடத்திலும் பதிலில்லை.

முடிந்தளவு தொடர்ச்சியாக தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை திணித்து தமிழர் தேசத்தை சிங்களமயமாக்கி தமிழர்களை ஈழ மண்ணில் இல்லா இனமாக ஆக்குவதற்கு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது.

தாயக விடுதலைக்காக மாவீரர் சிந்திய குருதி வெல்வது உறுதி - சீமான் ஆதங்கம் | Maaveerar Day 2022 Seeman

‘மாவீரர் சிந்திய குருதி வெல்வது உறுதி’. ஒற்றுமை ஒன்றே எமது மாவீரர்கள் கனவை நிறைவேற்ற நமக்கு வைத்திருக்கும் ஒரு வழி என்பதை உணர்ந்து தாயக விடுதலை புனித இலட்சியத்திற்காக அனைவரும் கைகோர்த்து மாவீரர்கள் எமக்கு அளித்த ஆன்ம பலத்தோடு பயணிக்க வேண்டும்.

ஆயுதங்களை கைவிடுங்கள், நாங்கள் சமாதானம் தருகிறோம் என்று உலகத்தார் தந்த உறுதிமொழிகளை போர் முடிந்து இத்தனை ஆண்டு காலம் கழித்தும் இன்னும் நிறைவேற்றியப்பாடில்லை. போரின் போது காணாமல் ஆக்கப்பட்டோர், விசாரணை என்ற பெயரில் வெள்ளை வேனில் கடத்தப்பட்டோரெலாம் என்ன ஆனார்களோ என எம்மினத் தாய்மார்கள் வடிக்கும் கண்ணீருக்கு எவரிடத்திலும் பதில் இல்லை.

ஒவ்வொரு ஐ.நா மன்ற அமர்வின் போதும் இனப்படுகொலை விசாரணை குறித்து தமிழர்கள் எழுப்பும் எந்த ஒரு குரலுக்கும் உலக சமூகம் மௌனத்தையே பதிலாக தருவது தமிழ்த்தேசிய இனத்திற்கு மிகப்பெரிய வலியாக இருக்கின்றது.

தமிழர் தேசத்தை சிங்களமயமாக்கி தமிழர்களை ஈழ மண்ணில் இல்லாத இனமாக ஆக்க செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எம் தமிழீழ மண்ணில் சிங்கள படையணிகள் முற்றிலுமாக அகற்றப்படவில்லை.

மாவீரர் தெய்வங்களுக்கு வீர வணக்கம்! “தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளான எம் மாவீரர் தெய்வங்களுக்கு எமது வீர வணக்கம்” என தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதேவேளை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ மாவீரர்களுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top