பெல்ஜியம் தலைநகர் பிரசில்சின் ஷர்க்பீக் பகுதியில் நேற்று இரவு 2 போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு கத்தியுடன் வந்த நபர் போலீசார் மீது சரமாரி தாக்குதல் நடத்தினார்.
பணியில் இருந்த போலீசின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். இதில், அந்த போலீஸ் அதிகாரி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். மற்றொரு போலீஸ் மீதும் அந்த நபர் தாக்குதல் நடத்த முற்பட்டார். அப்போது, அந்த போலீஸ் அதிகாரி தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு தாக்குதல் நடத்திய நபரை சுட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் சுருண்டு விழுந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த 2 போலீசாரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான ஒரு போலீஸ் அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு போலீஸ் அதிகாரிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தாக்குதல் நடத்திய நபரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, கத்திக்குத்து தாக்குதல் நடத்தியபோது ‘கடவுளே சிறந்தவன்’ என்று அரேபிய மொழியில் கூறுக்கொண்டு அந்த நபர் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த கத்திக்குத்து சம்பவம் பயரவாத தாக்குதல் என பெல்ஜியம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.