டுபாயில் ராஜபக்ச குடும்பம் பில்லியன் கணக்கான டொலர்களை வைப்பிலிட்டுள்ளதா என்பதை ஆராய்வதற்காக குழுவொன்று அங்கு அனுப்பப்பட்ட போதிலும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
டுபாய் நாட்டில் உள்ள வங்கி ஒன்றில் ஒரு பில்லியன் டொலர்கள் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மையா என கண்டறிய ஜே.சி.வெளியமுன, தில்ருக்ஷி டயஸ், ரவி வித்யாலங்கார ஆகியோரை அந்நாட்டுக்கு அனுப்பியதாகவும், அங்கு கிடைத்த தகவல் என்ன என அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியிடம் வினவியுள்ளார்.
அதற்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியதாவது: எமது நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஜனாதிபதியின் சட்டத்தரணி ஜே. சி.வெளியமுனவின் தலைமையில் ஒரு குழு டுபாய் சென்று அங்கு ஆராய்ந்து பார்த்துவிட்டு நாட்டிற்கு திரும்பியது. ஆனால் அவ்வாறு பணம் வைப்பு செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அதனால் இதனை விடவும் நான் செய்வதற்கு எதுவும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.