News

தென்கொரியாவில் இடிந்து விழுந்த சுரங்கத்தில் சிக்கிய 2 தொழிலாளர்கள் 9 நாட்களுக்கு பிறகு மீட்பு

தென்கொரியாவில் இடிந்து விழுந்த சுரங்கத்தில் சிக்கிய 2 தொழிலாளர்கள் 9 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டனர்.

தென்கொரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள போங்வா நகரில் துத்தநாகம் சுரங்கம் அமைந்துள்ளது.

கடந்த மாதம் 26-ந்தேதி இந்த சுரங்கத்தில் வழக்கம் போல் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 62 மற்றும் 56 வயதான 2 தொழிலாளர்கள் சுரங்கத்தில் 650 அடி ஆழத்தில் சிக்கி கொண்டனர். எனினும் இந்த விபத்து குறித்து கடந்த இரு தினங்களுக்கு முன்புதான் மீட்பு குழுவினருக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

மீட்பு குழுவினரின் கடும் முயற்சியின் பலனாக சுரங்கம் இடிந்து விழுந்த 9 நாட்களுக்கு பிறகு, நேற்று முன்தினம் தொழிலாளர்கள் 2 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்கள் தாமாக நடந்து வரும் அளவுக்கு உடல் வலிமையுடன் இருந்தனர். உடனடியாக அவர்கள் இருவரும் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர்.

இதனிடையே சுரங்கத்தின் அடியில் சிக்கிய தொழிலாளர்கள் இருவரும் கூரையில் இருந்து விழுந்த தண்ணீரை குடித்தும், காபி பவுடரை உணவாக உட்கொண்டும் உயிர் பிழைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்து நடந்த 9 நாட்களுக்கு பிறகு தொழிலாளர்கள் 2 பேரும் உயிருடன் மீட்கப்பட்டது உண்மையில் அதிசயம் என்று கூறிய அந்த நாட்டின் அதிபர் யூன் சுக் யோல் மீட்பு குழுவினருக்கு தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top