அமெரிக்காவில் பள்ளிக்கூடத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 2 மாணவர்கள் பலியாகினர்.
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோ நகரில் உயர்நிலை பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் நேற்று முன்தினம் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது.
மாணவ-மாணவிகளின் நடனம், இசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கொண்டாட்டங்கள் நிறைவடைந்ததும் மாணவ-மாணவிகள் வீட்டுக்கு செல்வதற்காக பள்ளியில் இருந்து வெளியேறி கொண்டிருந்தனர்.
அப்போது பள்ளிக்கூடத்துக்கு வெளியே முகமூடி அணிந்து நின்று கொண்டிருந்த மர்ம நபர் ஒருவர் பள்ளியில் இருந்த வெளியே வந்த மாணவ-மாணவிகளை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பீதியடைந்த மாணவ-மாணவிகள் அலறிதுடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓடினர். சிலர் மீண்டும் பள்ளிக்குள் ஓடிச்சென்று மறைந்து கொண்டனர். ஆனாலும் அந்த மர்ம நபர் தனது கொலைவெறி தாக்குதலை நிறுத்தவில்லை. கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவதுபோல் சுட்டுத்தள்ளினார். இதில் 15 வயதான 2 மாணவர்கள் மற்றும் ஒரு மாணவி, 14 வயதான மாணவர் என 4 பேரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. இதில் அவர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.
இதற்கிடையில் பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் அவசர தொலைபேசி எண் மூலம் துப்பாக்கி சூடு குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் பள்ளிக்கூடம் அமைந்துள்ள பகுதியை சுற்றிவளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் துப்பாக்கி சூடு நடத்திய அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதனையடுத்து துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த 3 மாணவர்கள் மற்றும் ஒரு மாணவியை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 14 மற்றும் 15 வயதான மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சிகிச்சை பெற்று வரும் மாணவர் மற்றும் மாணவியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொலையாளியை தேடும் போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய நபர் யார்? துப்பாக்கிச்சூட்டின் பின்னணி என்ன? போன்ற தகவல்கள் வெளியாகவில்லை. இதுபற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பள்ளிக்கூடம் அமைந்துள்ள பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கொலையாளியை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.