News

அமெரிக்கா: வாகன விபத்தில் 16 பேர் உயிரிழப்பு; 7 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின

அமெரிக்காவில் வானிலை தொடர்பான வாகன விபத்துகளில் சிக்கி 16 பேர் வரை உயிரிழந்து உள்ளனர்.

அமெரிக்காவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகி வந்த சூழலில், அந்நாட்டில் வீசி வரும் கடுமையான பனிப்புயலால் ஒட்டுமொத்த நாடும் உறைந்து போயுள்ளது.

குளிர்கால சூறாவளியால் நாடு முழுவதும் பனிபடர்ந்து சாலைகள் மூடப்பட்டு உள்ளன. விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.

டெக்சாஸ், சிகாகோ, நியூயார்க், ஓஹியோ பகுதிகளில் கடும் குளிரால் மக்கள் அவதியடைந்தனர். இந்நிலையில், திடீரென உருவான வெடிகுண்டு சூறாவளி எனப்படும் குளிர்கால புயலால் நேற்று முன்தினம் 15 லட்சம் பேருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு அவர்கள் இருளில் மூழ்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த நிலை நேற்றும் தொடர்ந்தது. இதனால், 7 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கி காணப்பட்டன. மற்ற இடங்களில் நிலைமை சீரமைந்து இருந்தது.

அமெரிக்காவில் பல பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 45 டிகிரி செல்சியஸ் அளவிற்கு கீழ் சென்றுள்ளது. குளிர்காற்றும் தொடர்ந்து வீசி வருகிறது. அமெரிக்காவின் நியூயார்க், சிகாகோ மற்றும் சியாட்டில் சர்வதேச விமான நிலையங்கள் உள்பட விமான சேவை பாதிக்கப்பட்டு 5 ஆயிரம் அமெரிக்க விமானங்கள் நேற்று முன்தினம் ரத்து செய்யப்பட்டும், 7,600 விமானங்கள் காலதாமத்துடன் இயக்கப்பட்டும் உள்ளன.

தொடர் குளிர் சூழலால், நேற்றும் இதே நிலை காணப்பட்டது. 2,700 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. 6,400 விமானங்கள் காலதாமத்துடன் இயக்கப்பட்டு உள்ளன. அமெரிக்காவில் குளிர்கால புயலால் தொடர்ந்து பல லட்சம் பேருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு, விடுமுறை கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படும் சூழல் உருவானது.

கொரோனா பெருந்தொற்றால் 2 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் இந்த ஆண்டும் களைகட்டாமல் போயுள்ளன. வானிலை தொடர்பான மாற்றங்களால் பல இடங்களில் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்கு உள்ளாகின.

ஓஹியோவின் டொலிடோ பகுதியருகே நடந்த இந்த சம்பவத்தில் இருபுறமும் சாலைகள் வாகனங்களால் தேங்கி காணப்பட்டன. இதனை தொடர்ந்து சாலையில் உறைபனியில் சிக்கி விடாமல் இருக்க வாகனங்களில் இருந்து இறங்கிய பலர் பேருந்துகளை பிடித்து செல்ல வேண்டியிருந்தது. இந்த விபத்து சம்பவத்தில் மொத்தம் 16 பேர் வரை உயிரிழந்து உள்ளனர்.

கென்டகி பகுதியில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர் என கவர்னர் ஆண்டி பெஷீர் நேற்று கூறியுள்ளார். மக்கள் வீடுகளிலேயே பாதுகாப்புடன் இருக்கும்படியும் அவர் கேட்டு கொண்டதுடன் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

நியூயார்க்கின் சில பகுதிகளில் வாகன இயக்கத்திற்கு நேற்று முன்தினமும், நேற்றும் வாகன தடை விதிக்கப்பட்டு இருந்தது. வாஷிங்டன் டி.சி.யில் 30 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு மிக குறைந்த வெப்பநிலை நேற்று பதிவானது. கிறிஸ்மஸ் பண்டிகை முழுவதும் தொடர்ந்து குளிர்கால சூழல் காணப்படும் என வானியல் நிபுணர் ஆஷ்டன் ராபின்சன் குக் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் மின்னிபோலிஸ் நகரம் நேற்று மைனஸ் 6 டிகிரி பாரன்ஹீட் என மிக அதிக குளிரான நகராக பதிவானது. கிறிஸ்மஸ் நாளான இன்று காலை பார்கோ, வடக்கு டகோட்டா நகரங்களில் வெப்பநிலை மைனஸ் 20 டிகிரியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top