News

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நேரில் சந்திப்பு..!!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்றுள்ளார். போர் தொடங்கிய பிறகு அவர் மேற்கொண்டுள்ள முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

வாஷிங்டன், உக்ரைனுக்கும், ரஷியாவுக்கும் நீண்டகாலமாக மோதல் நீடித்து வந்த சூழலில் உக்ரைன் தனக்கான பாதுகாப்பு அரணை உருவாக்க அமெரிக்கா, கனடா மற்றும் 28 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய உலகின் வலுவான ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய முயற்சித்தது. அப்படி நடந்தால் நேட்டோ அமைப்பால் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என கருதிய ரஷியா, உக்ரைன் மீது போர் தொடுத்து அந்த நாட்டை ஆக்கிரமிக்க முடிவு செய்தது.

அதன்படி சிறப்பு ராணுவ நடவடிக்கை என கூறி கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கியது. இந்த போர் நாளை மறுநாளுடன் 10-வது மாதத்தை நிறைவு செய்கிறது.

ரூ.1½ லட்சம் கோடி ராணுவ உதவி அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் வழங்கி வரும் ஆயுதங்களை கொண்டு உக்ரைன் ராணுவம் ரஷிய படைகளை துணிவுடன் எதிர்த்து சண்டையிட்டு வருகிறது. பல நாடுகள் ஆதரவாக இருந்தாலும் போரில் உக்ரைனுக்கு பெரும் பக்கபலமாக இருப்பது அமெரிக்கா தான்.

எதிரிக்கு எதிரி தனக்கு நண்பன் என்கிற முறையில் ரஷியாவுக்கு எதிராக உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வாரி வழங்கி வருகிறது அமெரிக்கா. கடந்த ஜனவரி மாதம் 24-ந் தேதியில் இருந்து நவம்பர் 20-ந் தேதி வரையிலான காலக்கட்டத்தில் உக்ரைனுக்கு அமெரிக்கா 18.51 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 53 ஆயிரம் கோடி) மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்கி இருப்பதாக புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா சென்றுள்ள ஜெலன்ஸ்கி ரஷிய படைகள் உக்ரைன் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில் அதிக சக்தி படைந்த கூடுதல் ஆயுதங்களை வழங்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில் ஜெலன்ஸ்கி திடீர் பயணமாக நேற்று அமெரிக்காவுக்கு சென்றார். போர் தொடங்கியதற்கு பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். அமெரிக்காவுக்கு செல்லும் முன்பு ஜெலன்ஸ்கி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “உக்ரைனின் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்துவதற்காக நான் அமெரிக்கா செல்கிறேன்” என குறிப்பிட்டார்.

இந்நிலையில் அமெரிக்கா சென்றுள்ள ஜெலன்ஸ்கி, இந்த பயணத்தின் ஒரு பகுதியாக வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஜோ பைடனை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத்தொடர்ந்து பேசிய ஜெலன்ஸ்கி, “அமெரிக்க காங்கிரசின் ஆதரவுக்கு நன்றி. ஜனாதிபதிக்கு மிக்க நன்றி, இரு கட்சி ஆதரவுக்கு நன்றி, எங்கள் சாதாரண மக்களின் சார்பாக , அமெரிக்கா மக்களுக்கும் நன்றி” என்று அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், “நம்புவது கடினம், இந்த கொடூரமான போரில் 300 நாட்கள் கடந்து, புதின் ஒரு தேசமாக இருப்பதற்கான உக்ரைனியர்களின் உரிமையின் மீது கொடூரமான தாக்குதலை நடத்தினார், மேலும் அச்சுறுத்தும் காரணத்திற்காக தவிர வேறு எந்த காரணமும் இல்லாமல் அப்பாவி உக்ரேனிய மக்கள் மீது தாக்குதல் நடத்தினார்” என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக உக்ரைனில் பல மாதங்களாக கடுமையான சண்டை நடந்து வரும் பக்முத் நகருக்கு முன்னறிவிப்பு இன்றி சென்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அங்கு ராணுவ வீரர்களை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது அங்கிருந்த ராணுவ வீரர்கள் சிலர் உக்ரைன் தேசியக்கொடியில் தங்களின் கையொப்பங்களை இட்டு ஜெலன்ஸ்கியிடம் வழங்கினர்.

அந்த கொடியை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் கொடுக்கும்படி ராணுவ வீரர்கள் கேட்டுக் கொண்டனர். அதன்படி ஜோ பைடனை சந்திக்கும் போது ஜெலன்ஸ்கி அந்த கொடியை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கடந்த திங்கட்கிழமை ரஷிய அதிபர் புதின் அண்டை நாடான பெலாரசுக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். போர் தொடங்கியதில் இருந்து பெலாரஸ் ரஷியாவுக்கு ஆதரவாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. போர் தீவிரமடைந்து வரும் சூழலில் இருநாடுகளின் தலைவர்களும் தங்களின் ஆதரவு நாடுகளுக்கு திடீர் பயணம் மேற்கொண்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top