ஆப்பிரிக்க நாட்டில் கண்ணிவெடியில் சிக்கி பஸ் வெடித்து 10 பேர் உடல் சிதறி பலியாகினர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் பல பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பயங்கரவாத தாக்குதல்களில் அங்கு ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். லட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர்.
இந்த சூழலில் கடந்த ஜனவரி மாதம் அங்கு ஆட்சியை கைப்பற்றிய ராணுவம் பயங்கரவாதத்தை ஒழிப்பதாக சூளுரைத்தது. எனினும் அங்கு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.
இந்த நிலையில் புர்கினோ பாசோவின் கிழக்கு பகுதியில் நைஜர் நாட்டின் எல்லையொட்டி அமைந்துள்ள படா கவுமா பிராந்தியம் அருகே மினி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது அங்கு புதைத்து வைக்கப்பட்டு இருந்த கண்ணிவெடியில் சிக்கி அந்த பஸ் வெடித்து சிதறியது. இதில் 10 பேர் உடல் சிதறி பலியாகினர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பஸ்சில் இருந்த சில பயணிகள் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.