இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள லுமாஜாங் நகரில் அந்நாட்டின் மிகப்பெரிய எரிமலையான செமேரு உள்ளது.
சுமார் 12 ஆயிரம் அடி உயரம் கொண்ட செ மேரு எரிமலை திடீரென்று வெடித்து சிதறியது. கன மழை காரணமாக செமேரு எரிமலையின் குவி மாடம் சரிந்தது.
இதனால் எரிமலையில் நெருப்பு குழும்பு வெளியேற தொடங்கியது. எரிமலையில் இருந்து சாம்பல் புகை மற்றும் நெருப்பு குழம்பு வெளியாகி வருகிறது.
5 ஆயிரம் அடி உயரத்துக்கு சாம்பல் புகை மேலே எழும்பியுள்ளது. அங்குள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் எரிமலை சாம்பல் பரவியுள்ளது.
மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சும்பர்வுலு, சுபிது ராங் கிராமங்களில் மீட்பு குழுவினர் விரைந்து சென்றனர். அங்கு வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மேலே எரிமலை குப்பைகள் கிடந்தன.
எரிமலை வெடிப்பு காரணமாக 2 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அப்பகுதிகளில் பெரும்பாலான சாலைகள் மூடப்பட்டுள்ளன.
எரிமலை குழம்பு பாயும் பாதையில் உள்ள பெகக் கோபோகன் ஆற்றின் தென்கிழக்கு பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கஜர்குனிங் என்ற கிராமத்தில் பாலம் ஒன்று சேதமடைந்துள்ளது. எரிமலை வெடிப்பால் சாம்பல் புகை மற்றும் நெருப்பு குழம்பு வெளியேற்றத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
இன்றும் எரிமலையின் ஆக்ரோஷம் அதிகரித்து இருக்கிறது. நேற்றை விட இன்று சாம்பல் புகை வெளியேறும் அளவு உயர்ந்து உள்ளது. இதனால் மேலும் பல இடங்களுக்கு சாம்பல் புகை பரவும் அபாயம் உள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் செமேரு எரிமலை வெடித்து சிதறியதில் 51 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.