உக்ரைன் போரில் இதுவரை அப்பாவி மக்கள் சுமார் 7 ஆயிரம் பேர் பலியாகி இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
கீவ், உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி ரஷியா போரை தொடங்கியது. 10 மாதங்களை கடந்து நீண்டு வரும் இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் சின்னாபின்னமாகி உள்ளன. ரஷியாவின் இந்த கொடூர போர் உக்ரைனில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரை பறித்ததோடு, லட்சக்கணக்கான மக்களை அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புக செய்தது. ஆனாலும் ரஷியாவின் வெறி அடங்கவில்லை. உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட பல்வேறு நகரங்களில் குடியிருப்பு கட்டிடங்கள் மீது ஏவுகணை மற்றும் டிரோன் மூலம் ரஷியா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
உக்ரைன் போரில் தற்போது வரை அப்பாவி மக்கள் சுமார் 7 ஆயிரம் பேர் பலியானதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- போர் தொடங்கிய பிப்ரவரி 24-ந் தேதியில் இருந்து கடந்த 26-ந் தேதி வரையில் போரில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 6,884 பேர் கொல்லப்பட்டனர். 10,947 பேர் காயமடைந்தனர், இது தவிர ரஷிய படைகளால் கைப்பற்றப்பட்ட உக்ரைன் நகரங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 483 பேர் கொல்லப்பட்டனர். 1,633 பேர் காயமடைந்தனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.