தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முதலடி எடுத்து வைத்துள்ளது ஜேர்மனியின் புதிய கூட்டணி அரசு.
ஒருங்கிணைந்து வாழ்ந்த புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு குடியிருப்பு அனுமதி
ஜேர்மன் நாடாளுமன்றத்தின் கீழவையில், புகலிடக்கோரிக்கை செயல்முறைகளை விரைவுபடுத்துவது தொடர்பில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
ஜேர்மனியுடன் ஒருங்கிணைந்து வாழ்ந்த புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு நீண்ட கால குடியிருப்பு அனுமதி வழங்குவது தொடர்பான மசோதா ஒன்று ஜேர்மன் நாடாளுமன்றத்தின் கீழவையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
அதாவது, குற்றச்செயல் எதிலும் ஈடுபடாத வெளிநாட்டவர்கள், ஐந்து ஆண்டுகள் ஜேர்மனியுடன் ஒருங்கிணைந்து வாழ்ந்துள்ள நிலையில், அவர்கள் நீண்ட கால குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம். மொழிப்புலமை, நிதி நிலைமை முதலான சில நிபந்தனைகளும் உள்ளதையும் மறுப்பதற்கில்லை.
இந்த மசோதாவுக்கு ஜேர்மன் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பும் இல்லாமல் இல்லை. 226 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மசோதாவை எதிர்த்து வாக்களித்தார்கள்.
அதேநேரத்தில், ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தன. அதாவது, மசோதாவுக்கு ஆதரவாக 371 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து மசோதா நிறைவேற வழிவகை செய்தார்கள். 57 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.