இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலகத்தையே உறையச் செய்த கொரோனா வைரஸ் என்னும் கிருமி சீனாவில் உள்ள வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி என்னும் ஆய்வு மையத்தில் உருவாக்கப்பட்டது என்று இந்த ஆய்வகத்தில் பணிபுரிந்த முக்கிய ஆராய்ச்சியாளர் ஒருவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பெருந்தொற்றின் போது மிகப் பெரிய சர்ச்சையில் சிக்கிய வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி என்னும் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் ஆராய்ச்சியாளர் ஆண்ட்ரூ ஹப் என்பவர் தனது புத்தகம் ஒன்றில் ” கொரோனா வைரஸ் இரண்டு வருடங்களுக்கு முன் மனிதனால் உருவாக்கப்பட்டது, அமெரிக்க அரசின் நிதியுதவியை கொண்டே இந்த கிருமி சீனாவில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் உருவாக்கப்பட்டது” என்ற தகவல்களை தெரிவித்துள்ளார்.
இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தனது “வுஹான் குறித்த உண்மைகள்” என்னும் புத்தகத்தில் இதுபோன்ற கருத்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சீன ஆராய்ச்சி மையத்தில் போதிய பாதுகாப்பு அம்சங்களோ முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளோ இல்லாமல் இந்த ஆராய்ச்சி மேற்கொண்டதால் தான் இந்த வைரஸ் கசிந்து மனித இனத்திற்கே பெரும் ஆபத்தை உருவாக்கியது என்றும் அதில் அவர் கூறியிருந்தார்.
அமெரிக்க அரசின் உயிரியல் மற்றும் மக்கள் உடல்நலம் குறித்து ஆராய்ச்சி செய்யும் நிறுவனங்களின் ஒன்று சீனாவில் வவ்வால்கள் மீது மேற்கொண்ட இந்த மரபணு மாற்றங்கள் தொடர்பான ஆராய்ச்சிக்கு நிதியுதவி செய்துள்ளதாகவும் இதன் விளைவுகள் குறித்தும் இதில் உள்ள ஆபத்துகள் குறித்தும் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளுக்குமே முன்பே தெரியும் என்றும் அதில் தெரிவித்துள்ளதாக ஆங்கில பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் கொரோனா பெருந் தொற்று உலகம் முழுவதும் பரவிய நிலையில் அனைத்து நாடுகளும் சீனாவின் பக்கம் திரும்பியது, பல்வேறு நாடுகள் தரப்பில் இதில் சீனாவின் சதி உள்ளது என குற்றச்சாட்டுகள் எழுப்பின.
மேலும் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் ஒரு பனிப்போர் உருவாக காரணமாக அமைந்தது.
தற்போது வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி என்னும் சீன அரசின் ஆராய்ச்சி மையத்தில் பணி புரிந்த முன்னாள் ஆராய்ச்சியாளர் தனது புத்தகத்தில் கொரோனா வைரஸ் குறித்து வெளிப்படுத்தியுள்ள தகவல்களால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.