News

ஜனாதிபதி ரணில் – ராஜபக்சக்களிடையே பனிப்போர் தீவிரம்!

வரவு – செலவுத் திட்டம் முடிந்தும் புதிய அமைச்சர்கள் நியமனம் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரை புதிய அமைச்சர்கள் நியமனம் சாத்தியமில்லை என்று ஜனாதிபதி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றின் அரசியல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

10 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், சில இராஜாங்க அமைச்சர்களும் நியமிக்கப்படவுள்ளனர். இந்த நியமனம் இழுபறியில் செல்கின்றது. இந்த இழுபறி காரணமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கான எதிர்ப்பு மொட்டுக் கட்சிக்குள் இருந்துகொண்டேதான் இருக்கின்றது.

அமைச்சுப் பதவி கேட்டு ரணில் விக்கிரமசிங்கவிடம் பஸில் ராஜபக்ச பல மாதங்களுக்கு முன் 12 பேர் அடங்கிய பெயர்ப்பட்டியல் ஒன்றை வழங்கி இருந்தார். பஸில் பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் கொஞ்சம்கூட அசையவில்லை ஜனாதிபதி ரணில்.அதற்குக் காரணம் அந்தப் பட்டியலில் இருந்த நால்வர் தான்.

நாமல் ராஜபக்ச, மஹிந்தானந்த அளுத்கமகே, ஜோன்சன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன ஆகிய நால்வரே அவர்கள். மக்கள் மத்தியிலும் மொட்டு எம்.பிக்கள் மத்தியிலும் இவர்களுக்கு எதிர்ப்பு இருப்பதால் இவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்க முடியாது என்று ரணில் உறுதியாகக் கூறிவிட்டார்.

சஜித் அணியில் இருந்து அரசில் இணையப் போகின்றவர்களும் அவர்கள் அமைச்சர்களாவதை விரும்பவில்லை. மொட்டுக் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்சவையும் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவையும் அழைத்து நிலைமையை ஜனாதிபதி விளக்கிக் கூறினார். அதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். வேறு பெயர்ப்பட்டியலைத் தருகின்றேன் என்று மஹிந்த கூறியிருந்தார்.

வரவு – செலவுத் திட்டத்தைத் துருப்புச் சீட்டாகாக் கொண்டு தமது கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு அமைச்சுப் பதவிகளைக் கைப்பற்றுவதற்கு அவர்கள் முயற்சி செய்தனர். சில அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீட்டைத் தோற்கடித்து ரணிலைப் பணிய வைப்பதற்கு முயற்சித்தனர். அது முடியவில்லை. ரணிலோ இந்த விடயத்தில் மிகவும் அமைதியாக இருந்தார்.

காரணம் அவர்களை வழிக்குக் கொண்டு வருவதற்கு அவரிடம் ஓர் ஆயுதம் இருந்தது. அதனால் ரணில் அசால்டாக நடந்துகொண்டார். இந்த விடயம் பற்றி – அந்த எம்.பிக்களின் எதிர்ப்பு பற்றி பஸிலிடம் கூறினார் ரணில். “வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் எனக்கு எந்த நட்டமும் இல்லை. மொட்டுக் கட்சி எம்.பிக்களுக்குத்தான் நட்டம்.

வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் நாடாளுமன்றத்தைக் கலைக்க நேரிடும். அப்படிக் கலைத்தால் நாடு இப்போது இருக்கும் நிலையில் அதிகமான எம்.பிக்கள் தோல்வியடைவார்கள். நட்டம் உங்களுக்கே அன்றி எனக்கில்லை. அமைச்சுப் பதவிக்கு ஆசைப்பட்டு இறுதியில் எம்.பி. பதவியையும் இழக்கப்போகிறீர்கள்” என்றார் ரணில்.

அதனால் சற்று ஆடிப்போனார் பஸில். உண்மைதான். இது தேவையில்லாத சண்டை. மீண்டும் கட்சிக்குள் பிளவையும் வீழ்ச்சியையுமே தரும் என்று உணர்ந்த பஸில் அந்த விவகாரத்தை அப்படியே ஜனாதிபதியின் விருப்பத்துக்கே விட்டுவிட்டார்.

இந்நிலையில், அமைச்சரவை நியமனம் இன்னும் காலம் தாழ்த்தப்படும் என்று அறியமுடிகின்றது. அதாவது, ஜனவரி 15ஆம் திகதி வரை சாத்தியமில்லை என்று ஜனாதிபதி வட்டாரத்தில் இருந்து அறியமுடிகின்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top