ஜப்பானில் கடும் பனிப்பொழிவு காரணமாக குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக ஜப்பானின் தீ மற்றும் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
வடக்கு மற்றும் மேற்கு ஜப்பானில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக, குளிர்கால பனிப்புயல்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க குடியிருப்பாளர்களுக்கு வானிலை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ஜப்பான் தற்போது குளிர்கால அழுத்த முறைகளுக்கு உட்பட்டுள்ளதாக கியோடோ செய்தி தெரிவித்துள்ளது.
ஹொக்கைடோ, அகிதா, யமகட்டா, நிகாடா மற்றும் இஷிகாவா ஆகிய ஐந்து மாகாணங்களில் இந்த எட்டு இறப்புகள் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆறு மாகாணங்களில் பனி தொடர்பான விபத்துக்களில் 19 பேர் படுகாயமடைந்துள்ளனர் மற்றும் 26 பேர் சிறு காயங்களுக்கு உள்ளானதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
ஜப்பான் ஏர்லைன்ஸ் 59 வானூர்திகளையும், நிப்பான் ஏர்வேஸ் 41 வானூர்திகளையும் ரத்து செய்துள்ளன. இது முறையே சுமார் 3,750 மற்றும் 1,470 பயணிகளைப் பாதித்தது என்று ஜப்பான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஜப்பானில் நாளை திங்கள்கிழமை வரை மோசமான வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.