News

தென்கொரியாவுக்குள் டிரோன்களை அனுப்பி வடகொரியா அடாவடி

 

 

தென்கொரியாவுக்குள் டிரோன்களை வடகொரியா அனுப்பியதால், கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடிக்கிறது.

தென்கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் விதமாக வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் வடகொரியா நேற்று முன்தினம் 5 டிரோன்களை தென்கொரியாவை நோக்கி அனுப்பியது. இந்த டிரோன் தென்கொரியா வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்தன.

வடகொரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஜியோங்கி மாகாணத்துக்குள் புகுந்து டிரோன்கள் வட்டமிட்டன. அவற்றில் ஒரு டிரோன் தென்கொரியா தலைநகர் சியோலின் வடக்கு எல்லை வரை பறந்தது. இதனால் தென்கொரியாவில் பெரும் பதற்றம் உருவானது. அதனையடுத்து, தென்கொரிய விமானப்படை உஷார்படுத்தப்பட்டது.

வடகொரியா டிரோன்களை சுட்டு வீழ்த்துவதற்காக போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் விரைந்தன. வடகொரிய டிரோன்களை நோக்கி ஹெலிகாப்டர்களில் இருந்து 100 முறை துப்பாக்கியால் சுடப்பட்டது. எனினும் 5 டிரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டதா? அல்லது வடகொரியாவுக்குள் விரட்டியடிக்கப்பட்டதா? என்பதை தென்கொரியா ராணுவம் தெளிவுப்படுத்தவில்லை.

கடந்த 5 ஆண்டுகளில் வடகொரிய டிரோன்கள் தென்கொரிய எல்லைக்குள் நுழைவது இதுவே முதல் முறையாகும். வடகொரியாவின் இந்த அடாவடியால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top