பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் உள்ள லாஸ்பேலா நகரில் சந்தை ஒன்று உள்ளது. இங்கு ஏராளமான கடைகள் அமைந்துள்ளன. இந்தநிலையில் நேற்று இந்த சந்தை வழக்கம் போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.
அப்போது அங்குள்ள ஒரு கடையில் வைக்கப்பட்டிருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. இதில் கடையில் தீப்பற்றிய நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த மேலும் பல சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்தன. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது.
கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட தீ அருகில் உள்ள மற்ற கடைகளுக்கு பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. அதோடு சந்தையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு டஜனுக்கும் அதிகமான வாகனங்களும் தீக்கிரையாகின.
இந்த கோர விபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். மேலும் 25 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.