ஸ்பெயினில் இரண்டு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 155 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்பெயினின் வடகிழக்கு கட்டலோனியா பகுதியில் உள்ள ரயில் நிலையமொன்றில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் உள்ள மன்ரேசா புகையிரத நிலையத்தை நோக்கி நேற்று காலை பயணிகள் புகையிரதம் ஒன்று சென்றுள்ளது.
அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு பயணிகள் புகையிரதத்துடன் குறித்த புகையிரதம் மோதியுள்ளது.
இந்த விபத்தில் 155 பேர் காயமடைந்துள்ளதாகவும், 14 பயணிகள் மேலதிக சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவ மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவசர சேவை அதிகாரி ஜோன் கார்ல்ஸ் கோம்ஸ் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் வைத்தியசாலையில் சேர்க்கப்படும் அளவுக்கு யாரும் பெரிய காயம் ஏற்படவில்லை. விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில் இதுப்பற்றி விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.