அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியாகினர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மான்டேரி பார்க் நகரில் கடந்த 21-ந் தேதி சீன புத்தாண்டை கொண்டாட ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தபோது, 72 வயது முதியவர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலியாகினர்.
இந்த சம்பவத்துக்கு பிறகு கலிபோர்னியா மாகாணத்தில் தொடர்ச்சியாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அருகே பெவர்லி கிரெஸ்ட் என்கிற இடத்தில் உள்ள சொகுசு விடுதியில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர்.
அப்போது சொகுசு விடுதிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை கண்மூடித்தனமாக சுட்டார். இதில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபரை வலை வீசி தேடி வரும் போலீசார் துப்பாக்கி சூட்டின் பின்னணி குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இது கலிபோர்னியாவில் இந்த மாதத்தில் நடந்த 6-வது துப்பாக்கிச்சூடு சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.